கரூர், மார்ச 3-
கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட பவித்திரமேடு எண்: 2 நியாய விலைக்கடை பூட் டியே கிடப்பதால் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க முடியாமல் பொது மக்கள் அவதிக்கு உள்ளாகி யுள்ளனர்.கரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 13 ஆயிரம் குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் அரவக்குறிச்சி வட்டத் தில் 61 ஆயிரத்து 808 குடும்ப அட்டைகள் உள்ளன. இதன் கீழ் மொத்தம் 120 நியாய விலைக்கடைகள் உள்ளன. இவற்றில் 82 முழு நேர கடைளும் செயல்பட்டு வருகின்றன. க.பரமத்தி ஒன்றியம் பவித்திரம் ஊராட்சியில் பவித்திரமேடு பேருந்து நிறுத்தம் அருகே முழு நேர நியாய விலைக்கடை ஆரம்பத்தில் முழு நேரமும் செயல்பட்டு வந்தது. பிறகு விற்பனையாளர் பற்றாக்குறையால் வாரத்தில் செவ்வாய், வியாழன், சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே திறக்கப்பட்டது. இக்கடையில் சாலப்பாளையம், குளத்துப்பாளையம், கொலுஞ்சி காட்டூர், பவித்திரம், கந்தம்பாளையம், பவித்திரமேடு, குரும்பபட்டி, ராசாம்பாளையம், மலையூர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் சுமார் 800க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அரிசி, பாமாயில், மண்ணெண்ணெய், சர்க்கரை, கோதுமை, உளுந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்கி பயன்பெற்று வந்தனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 11ம்தேதி இக்கடையில் பணியாற்றி வந்த விற்பனையாளர், வெளிமாநிலங்களுக்கு ரேசன் அரிசி மூட்டைகளை கடத்த முயன்றபோது, அதிகாரிகள் அவரை கையும்களவுமாக பிடித்து, அவரை கைது செய்தனர். அதன்பின் ஒரு வாரமாக நியாயவிலை கடை திறக்காமல் இருந்தது. சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டதன் பேரில் ஒருநாள் மட்டும் கடை திறக்கப்பட்டது. தற்போது இந்த நியாய விலைக்கடை பூட்டியே கிடப்பதால் 15 நாட்களாக ரேசன் பொருள்கள் வாங்க முடியாமல் தினசரி கடையில் வந்து காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் பொதுமக்கள் திரும்பி செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பொதுமக்களின் நலன் கருதி இந்த நியாய விலைக்கடையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: