திருப்பூர், மார்ச் 3-திருப்பூர் சிறு விசைத்தறி உரிமையாளர்களிடம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 27 சதவிகிதம் சம்பள உயர்வு வழங்குவது என இருதரப்புப் பேச்சுவார்த்தையில் மூன்று ஆண்டு கால சம்பள ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஒப்பந்தம் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.திருப்பூரில் சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் முருகேஷ், போஸ், ஈஸ்வரன் உள்ளிட்டோருக்கும், விசைத்தறித் தொழிலாளர்கள் சார்பில் சிஐடியு விசைத்தறித் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலாளர் பி.முத்துச்சாமி, சிஐடியு மாவட்ட நிர்வாகி பி.முருகேசன், பாலகிருஷ்ணன், எம்எல்எப் சார்பில் செ.முத்துக்குமாரசாமி ஆகியோருக்கும் இடையே வெள்ளியன்று கூலி உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.இப் பேச்சுவார்த்தையில் சிறு விசைத்தறி உரிமையாளர் கூடங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மூன்றாண்டு காலத்துக்கு 27 சதவிகிதம் சம்பள உயர்வு வழங்குவது என உடன்பாடு காணப்பட்டது. இதன்படி முதல் ஆண்டு 15 சதவிகிதம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டுகளில் தலா 6 சதவிகிதம் வீதம் சம்பள உயர்வு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.இந்த விபரத்தை சிஐடியு விசைத்தறித் தொழிலாளர் சங்க மாவட்டப் பொதுச் செயலாளர் பி.முத்துச்சாமி தெரிவித்தார்.

Leave A Reply