மூகச் சீர்திருத்த நோக்கங்களைப் பரப்புவதில் மிகுத்துணிவுடன் ரானடே செயல்பட்டார். அவரது துணிவு பற்றிக் குறிப்பிட்டதற்காக இந்த தலைமுறையினர் ஒருவேளை நகைக்கலாம். இன்று இந்தியாவில் சிறைக்குச் செல்வது தியாகமாகக் கருதப்படுகிறது. அது துணிவாகவும், நாட்டுப் பற்றாகவும் மதிக்கப்படுகிறது. சமூகத்தால் புறக்கணிக்கப்பட வேண்டிய ரவுடிகள், தங்கள்பிழைப்புக்கு வேறு வழியில்லாது, அரசியலில் தஞ்சம் புகுந்து, சிறை சென்று, பேரும் புகழும் பெறுவது விசித்திரமாக உள்ளது. திலகர், மற்றும் அவரது தலைமுறையினர் சிறையில் உண்மையாகவே துன்புற்றனர். ஆனால் இன்றைய சிறை வாழ்வில் பயப்படுவதற்கு எதுவுமில்லை. அது வெறும் தடுப்புக் காவல் போன்றதாகி விட்டது. அரசியல் கைதிகள் குற்றவாளிகளாக நடத்தப்படுவதில்லை. அவர்கள் தனி வகுப்பில் வைக்கப்படுகிறார்கள். துன்புறுத்தும் கொடுமைகள் இல்லை.
இழப்பதற்கான பெருமை எதுவும் இல்லை. தனிமைத் துன்பம் கூட இல்லை. இதற்குத் துணிவு தேவையில்லை. திலகர் காலத்துச் சிறைவாழ்வுத் துன்பங்கள், இன்றைய அரசியல் கைதிகளுக்கு நேர்ந்தால்கூட, அவர்கள் சமூக சீர்திருத்த வாதிகளைவிடத் துணிவானவர்கள் என்று கூற முடியாது. தனிமனிதனை, அரசாங்கத்தைவிட, ஒரு சமூகம் அடக்கு முறைகளால் பெரிய அளவில் கொடுமைப்படுத்த முடியும் என்பதைப் பலர் உணர்வதில்லை. அடக்குமுறைக்கான வாய்ப்பு, வழிமுறைகள், அரசுக்கு இருப்பதைவிட, சமூகத்திற்குப் பரந்து விரிந்து இருப்பதால் தீவிரமாகச் செயல்படுத்த முடிகிறது. குற்றவியல் தீர்ப்பில் அளிக்கப்படும் எந்தத் தண்டனையும், அளவிலும், கடுமையிலும், சமூகத்தை விட்டு விலக்கி வைப்பதற்கு நிகராகாது. யார் அதிகத் துணிச்சலுள்ளவர்? சமூகத்துக்கு அறைகூவல் விடுத்து, சமூகப் பகிஷ்கரிப்பைத் தானே வரவழைத்துக் கொள்ளும் சமூக சீர்திருத்தவாதியா? அல்லது அரசை எதிர்த்ததற்காக ஒரு சில மாதமோ, வருடமோ சிறை தண்டனை பெறும் அரசியல் வாதியா? அரசியல்வாதி, சமூக சீர்திருத்தவாதி இவர்களின் துணிவை ஒப்பிடும் பொழுது ஒரு வேறுபாட்டை மறந்து விடுகிறோம்.
ஒரு சமூக சீர்திருத்தவாதி சமூகத்தை எதிர்த்ததற்காக, அவரை யாரும் தியாகி என்று கொண்டாடுவது இல்லை. அவருடன் உறவாடுவதற்குக்கூட எல்லோரும் தயங்குவர். ஆனால் அரசியல்வாதி அரசை எதிர்த்துப் பேசினால், முழுச் சமூகமும் அவருக்குத் துணை நிற்கிறது. அவர் புகழப்படுகிறார், போற்றப்படுகிறார், மீட்பர் என்ற நிலைக்கும் உயர்த்தப்படுகிறார். அதிகத் துணிவுடன் செயல்படுவது, தன்னந்தனியே போராடும் சமூக சீர்திருத்தவாதியா? பெருங்கூட்டத்தைக் கவசமாகவும் , துணையாகவும் கொண்டு போராடும் அரசியல்வாதியா? ரானடே சமூக சீர்திருத்தவாதியாக மிகப் பெருந்துணிவுடன் செயல்பட்டார் என்பதை மறுப்பது பொருளற்றது. உண்மையில் ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ரானடே வாழ்ந்த காலகட்டத்தில் சமூக, மத பழக்க வழக்கங்கள் அருவருக்கத் தக்கதாகவும், ஒழுக்கக் கேடானவையாகவும் இருந்தன. இருப்பினும் அவை புனிதமாகப் போற்றப்பட்டதோடு, அவற்றின் தெய்வீகத் தன்மைபற்றி யாரும் கேள்வி கேட்கவும் கூடாது. மத ஆச்சாரங்களின் நம்பகத்தன்மை பற்றி சந்தேகப்படுவது கூட அபச்சாரமாகவும், பழிப்புரையாகவும், தீட்டாகவும் கருதப்பட்டது.சீர்திருத்த நோக்கில் ரானடே சென்ற பாதை தடைகள் நிறைந்தனவாயிருந்தன.
எல்லாப் பக்கங்களிலிருந்தும் அதற்கு எதிர்ப்பு இருந்தது. அவர் சீர்திருத்த முயன்ற மக்களின் மனப்பான்மை பழமையில் ஊறியிருந்தது. தங்களது முன்னோர்கள் அறிவுக் கூர்மையுடையவர்கள், மேன்மையான மனிதர்கள், அவர்கள்ஏற்படுத்திய சமூக அமைப்பு சமூகத்தில் எவையெல்லாம் வெட்கக் கேடானவை, தீயவை என்று கருதினாரோ அவையெல்லாம் அவர்களுக்குப் புனிதமான மதக் கட்டளைகளாக இருந்தன. அரசியல் சாராத பழமை விரும்பிகள் ஹெகலியக் கோட்பாடான ( என்னைப் பொருத்த அளவில் அது பெரும் புதிர்)“நிறையுள்ளதை ஒழுக வேண்டும் ஒழுகுவதைநிறையுள்ளதாக்க வேண்டும்”என்பதை நம்பினார்கள். இக்கோட்பாடு அதிர்ச்சியூட்டும் அளவுக்குக் கேடு நிறைந்தது. இந்த சமூக நிறைவானது என்று கூறுவதைக் கடைப்பிடிக்க முடியாது. ஏனெனில் அவர்கள் நிறைவானது என்று கூறுவது மிகமிகக் கேடானது. அது போகட்டும். கடைப்பிடிப்பதை நிறையுள்ளதாக்கமுடியுமா? ஒழுகப்படுவது, அதாவது நடைமுறையில் இருப்பது கேட்டினும் கேடானது. இந்தக் கேடுற்ற நிலையில்தான் இந்து மதமும், இந்து சமூக அமைப்பும் உள்ளது. இது மிகையான வாதமல்ல.
இந்துமத அமைப்பு, இந்து சமூக அமைப்பு, இவற்றை மையப்படுத்தி, சமூகப் பயன்பாடு, சமூக நீதி என்ற இரு நிலைகளில் அவற்றைப் பரிசீலனை செய்வோம். புதிதாகத் தோன்றும் மதங்கள் தொடக்க காலங்களில் அச்சுக் கூடத்திலிருந்து அப்பொழுதுதான் வெளிவந்த புது நாணயம் போன்று பொலிவுடன்இருக்கும் என்பார்கள். ஆனால் இந்து மதம், தோற்றுவிக்கப்பட்ட நாளிலிருந்தே துருப்பிடித்த நாணயமாகத்தான் இருந்து வருகிறது.-அம்பேத்கர்

Leave a Reply

You must be logged in to post a comment.