நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத மின்வெட்டு தமிழகத்தில் தொழில் வளர, நீலகிரி மாவட்டம் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளது. நாள்தோறும் 12 நீர்மின் நிலையங்கள் மூலமாக 833.65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம் ஈரோட்டில் உள்ள மின்பகிமான மையத்தில் இருந்து தேவைக்கு ஏற்ப தமிழகத்தின் பல பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
மேலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 17 அணைகளில் தேக்கிவைத்து மின்சார உற்பத்திக்குப் பிறகு, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு, சுமார் 3 லட்சம் ஏக்கர் பாசன நிலத்திற்கு தேவையான தண்ணீரும், குடிநீர் தேவைகளும், ஓரளவு பூர்த்தி செய்யும் மாவட்டமாக நீலகிரி மாவட்டம் உள்ளது. தேயிலை தொழில் தவிர மிகப்பெரிய தொழிற்சாலைகள், ஒன்றுமில்லாத அளவிற்கு நீலகிரி மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் மின்தடை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது 80 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத ஒன்றாகும். 1932-ம் ஆண்டுமுதல் சிங்காராவில் உள்ள, பைக்கார மின் நிலையத்திலிருந்து நாம் மின்சார உற்பத்தி செய்து வருகிறோம். அன்றுமுதல் இன்றுவரை, நீலகிரிமாவட்டத்தில் மின்வெட்டு இருந்ததில்லை.பைக்காரா மின்நிலையம் (சிங்காரா) 59.2 மெவா. மாயார் மின் நிலையம்-36 மெவா., குந்தா-1 மின் நிலையம்-60மெவா, கெத்தையில் உள்ள குந்தா-2 மின்நிலையம்-175மெவா., பரளியில் உள்ள குந்தா-3 மின்நிலையம் -180 மெவா., பில்லூரில் உள்ள குந்தா-4 மின்நிலையம்-100 மெவா., அவலாஞ்சியில் உள்ள குந்தா-5 மின்நிலையம்-40 மெவா., பார்சன்ஸ் வேலியில் உள்ள குந்தா-6 மின்நிலையம்-30 மெவா., சிங்காராவில் உள்ள பஷப் மின்நிலையம் 150 மெவா., மரவக்கண்டியில் உள்ள மினி மின் நிலையம் 3/4மெவா., பைக்காராவில் உள்ள மைக்ரோ மின்நிலையம்-2 மெவா., முக்குறுத்தியில் உள்ள மைக்ரோ மின்நிலையம்-700 கிலோ வாட் என்று ஆக மொத்தம் 833.65 மெகாவாட் மின்சாரம், நாள் ஒன்றுக்கு, நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. கவனிப்பாரற்ற நிலைஅணைகளில் சேறும் மண்ணும்நிரம்பி, முறையாக தூர்வாரி அணைகள் பராமரிக்கப்படாததால், மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை முழுமையாக சேகரிக்க முடிவதில்லை. ஊட்டி தலைக்குந்தா பகுதியைப் பார்த்தால் இதை நன்கு உணர முடியும், சாண்டிநல்லா காமராஜா அணையின் தண்ணீர் தேங்கும் பகுதி மண்மேடாக உள்ளது. குந்தா, கெத்தை போன்ற பகுதிகளில் உள்ள அணைகளின் நிலையும் இதுதான்.அப்பர் பவானி, போத்திமந்து, பார்சன்ஸ்வேலி, எமரால்டு 1-2 அணைகள் பைக்காரா, கிளன்மார்கன், முக்குறுத்தி, பில்லூர் ஆகிய அணைகள் மிகப்பெரிய அணைகளாகும், இதுதவிர, சிறு அணைகளையும் இணைத்து பார்த்தால், மாவட்டத்தில் 17 அணைகள் உள்ளது. இதை முறையாக தூர்வாரி பராமரித்தால் தண்ணீர் கொள்ளளவை இன்னும் அதிகரிக்க முடியும்.
ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லைகுந்தா மின் உற்பத்தி வட்டத்தில், 1977 கால கட்டத்தில், 2000 தொழிலாளர்கள் இருந்தனர். ஆனால் தற்பொழுது சுமார் 450 தொழிலாளர்கள் மட்டுமே உள்ளனர். தொழிலாளர்களின் குடியிருப்புகள் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்துகட்டப்பட்டவை, அவை இன்று பழுதடைந்து வீணாகிப் போய்கொண்டிருக்கிறது. மின் இயந்திரங்கள் முறையாக பராமரிப்பு செய்யப்படுவதில்லை.
இதனால் சிங்காரா மின்நிலையத்தில், மின் உறபத்தி இயந்திரம் வெடித்து விபத்துகூட நடந்துள்ளது. பழுதடைந்த இயந்திரத்தை,பிறகு பழுது பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிடுவதால், சுமார் 7 மெகாவாட் மின் உற்பத்தி இன்று தடை ஏற்பட்டுவிட்டது.வாராந்திர, மாதாந்திர, 6-மாத பராமரிப்பு, மற்றும் வருட பராமரிப்பு என்று முறையாக செய்ய வேண்டிய பராமரிப்புப் பணிகளை, தொழிலாளர்கள் இல்லாத காரணத்தால் இன்று நடைபெறுவதில்லை. கடந்த 10 வருட காலமாக நீர்மின் உற்பத்தியை பெருக்க, நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான வாய்ப்புகள் இருந்தும், தமிழக அரசு அதைப்பற்றி கவலைப்படாமல், ஏனோதானோ என்ற போக்கில் இருந்துவிட்டது. அதிமுக அரசும் திமுக அரசும் இந்த பிரச்சனையில் ஒரே நிலையைத்தான் பின்பற்றியது.முடக்கப்பட்ட பணிகள் நீலகிரி மாவட்டத்தில் 100 ஏக்கர் நிலம் மின்நிலையம் உருவாக்க விலைக்கு வாங்கி, பணி துவங்கப்படும் நேரத்தில், அந்த பணியினை கிடப்பில் போட்டதால் காட்டு குப்பையில் நிறுவவேண்டிய 500 மெவா. நீர்மின் உற்பத்தி நிலையம் உருவாகாமல், இதற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் அனைத்தும் வீணாகிவிட்டது. நெல்லித்துரையில் 10 மெவா. மின்நிலைய பணி முடிவடையும் நிலையம் உள்ளது. கூக்கல் தோரை, கல்லார் உள்ளிட்ட சுமார் 10 சிறிய நீர்மின்நிலையங்கள் உருவாக்க நீலகிரியில் வாய்ப்புகள் உள்ளது. இந்த வாய்ப்புகள் முழுவதும் கைவிடப்பட்டதுடன், இது சம்பந்தமான சர்வே நடத்தும் மின்வாரியத்தில் செயல்பட்டுவந்த ஹைட்ரோ மெட்ரிக் சர்வே மற்றும் ஹைட்ரோ எலக்ட்ரிக் சர்வே ஆகிய பிரிவுகள் உள்பட நீலகிரியில் செயல்படுத்தாமல் ரத்து செய்யப்பட்டது.
அதிக செலவு இல்லாமல், சுற்றுசூழல் பாதிக்காமல், எளிதாக கிடைக்கும் மின்சாரத்தை எடுக்காமல் அவைகளை அலட்சியமாககருதும் அரசின் செயல்பாடு காரணமாக, இன்று, தமிழகம் கடும்மின்வெட்டு நெருக்கடியை சந்தித்தது மட்டுமின்றி, நீலகிரியிலும் 4 மணிநேரம் மின்வெட்டு 1-3-12 முதல் அமல்படுத்தப்பட்டது.வரலாறு காணாத பாதிப்பு தேயிலை தொழிற்சாலைகள் சுமார் 200 வரை நீலகிரியில் உள்ளது. இதன் செயல்பாடுகள், மின்வெட்டின் காரணமாக மிகப்பெரியஅளவில் பாதிக்கச் செய்யும், ஏற்கனவே பச்சை தேயிலை எடுக்க தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. மின்வெட்டு காரணமாக, தொழிற்சாலைகளின் உற்பத்தி செலவு அதிகரிக்கும். அதன் விளைவாக பச்சை தேயிலையின் விலை கடுமையாக வீழ்ச்சி அடையும் ஆபத்து உள்ளது.தேயிலை தொழிலில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் வேலைதேடி, வெளியூர்களுக்கு செல்வதோடு, கணவன்-மனைவி ஆகியோர்கூட வேலை தேடி வெளியேறும் ஆபத்தான நிலையும் உள்ளது. இதனால் குடும்ப உறவு, சமூக கட்டுப்பாடு, நமது கலாச்சாரம் இவை அனைத்தும், கடுமையாக பாதிக்கும் நிலை உள்ளது.இதுதவிர சிறிதும் பெரிதுமான பணிமனைகள் நடத்துபவர்கள், அச்சகங்கள், ஜெராக்ஸ் மையங்கள், லாட்ஜ், ஹோட்டல்கள், வர்க்ஷாப், பேக்கரி, உள்பட அனைத்தும் பாதிக்கக்கூடும், உற்பத்தி செலவுகள் உயரும். இதை பயனீட்டாளர்களின் தலையில்போடும் போது விலைவாசி மேலும் உயரும் ஆபத்து உள்ளது. பள்ளி மாணர்களின் படிப்பு பாதிக்கப்படுவதுடன், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், மருத்துவமனைகள், உட்பட கடுமையாக பாதிக்கும் நிலை உள்ளது.
இதை நம்பி பல்லாயிரம் குடும்பங்கள் வாழ வேண்டியுள்ளது. ஆகவே தமிழக அரசு நீலகிரி மாவட்டத்தில், வாய்ப்புள்ள, சாத்தியமான மின் உற்பத்தி நிலையங்களை உடனே உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவை ஆக்க பூர்வ நடவடிக்கைகள் காட்டுகுப்பை மின்நிலையப் பணிகள் கடந்த முறை ஆடசியிலிருந்த திமுக அரசு கைவிட்தை உடனே துவங்க இன்றைய அரசு தயாராக வேண்டும். கட்டுமான பணி முடிவடையும் நிலையல் உள்ள பில்லூர்-நெல்லித்துரை மின்நிலைய பணிகள் அவசர வேகத்தில் முடிக்கச் செய்ய வேண்டும். அணைகளில் நிரம்பி உள்ள தூர் எடுக்க வேண்டும். முறையாக பராமரிப்பு பணிகள் செய்து மின்சார இழப்பை தவிர்க்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேவையான தொழிலாளர்களை பணியில் அமர்த்தவேண்டும். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் கடுமையாக பாதிக்கும் நிலையை, இந்த மின்வெட்டு உருவாக்கியுள்ளது. இந்த மாவட்டத்திலிருந்து விவசாய தொழிலாளர்கள் பணிக்காக, பிற மாவட்டத்திற்கும், மாநிலங்களுக்கும் வெளியேறும் ஆபத்தை அரசு தடுக்க வேண்டும். விவசாயம் சார்ந்த சிறு தொழில்களுக்கும், ஹோட்டல், லாட்ஜ், போன்ற நிறுவனங்கள் மினவெட்டால் கடுமையாக பாதிப்படையும், மாணவர்களின் கல்வியும், பாதிக்கும். ஆகவே நீலகிரியில் 1-3-12 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள 4 மணிநேர மின்வெட்டை உடனேரத்து செய்ய தமிழக அரசுமுன்வரவேண்டும். – என். வாசு

Leave A Reply

%d bloggers like this: