நாமக்கல், மார்ச் 2-நாமக்கல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி உரிமையாளர்கள் சுங்க சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாமக்கல்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கீரம்பூர் அருகில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பராமரிப்பில் சுங்கச் சாவடி செயல்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப்படி சுங்கச்சாவடியில் சாலை உபயோகிப்பாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால், சுங்கச் சாவடி மையத்தில் குடிநீர், ஓய்வறை, வாகனம் நிறுத்துமிடம், கழிப்பிட வசதி மற்றும் துணைச்சாலைகள் போன்ற வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என லாரி உரிமையாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் ரிலையன்ஸ் நிறுவனம் எத்தகைய அடிப்படை வசதிகளையும் மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்து வந்தது. இந்நிலையில் தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் நல்ல தம்பி தலைமையில் இருநூற்றுக்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சுங்கச்சாவடியில் வரி செலுத்தாமல் லாரிகள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் சாவடியை கடந்து செல்லும் வகையில் கேட்டுகளை திறந்து விட்டனர். இப்போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply