கோவை, மார்ச் 2,மின்விடுமுறைக்கு பிறகாவது மற்ற நாட்களில் தொழில் நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரத்தினை வழங்கிட வேண்டும் என டேக்ட் அமைப்பு வலியுறுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த பல மாதங்களாக கடுமையான மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்காரணமாக கோவை உள்ளிட்டு மாநிலம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் பெருமளவு பாதிப்படைந்தன. எனவே. மின்வெட்டு பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண தமிழக அரசை வலியுறுத்தி தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன்பின், தமிழக அரசு மின் பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் தொழிற்சாலைகளுக்கான மின்விடுமுறை தினத்தினை அறிவித்துள்ளது. இதனால், கோவை உள்ளிட்ட நகரங்களில் 4 மணிநேரம் மின்வெட்டு மட்டுமே அமல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மின் விடுமுறை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு ஊரக சிறு, குறு தொழில் முனைவோர் சங்கத்தின் ( டேக்ட்) தலைவர் ஜேம்ஸ் தெரிவித்திருப்பதாவது,தமிழக அரசு நீண்ட போராட்டங்களுக்கு பிறகு வாரத்தில் ஒருநாள் மின் விடுமுறையை அறிவித்து கோவை மாவட்டத்தில் முதன் முறையாக தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையை வரவேற்கிறோம். ஆனால், இம்மின் விடுமுறைக்கு பிறகாவது மற்ற நாட்களில் தடையில்லா மின்சாரத்தை வழங்கிட வேண்டும். அப்போதுதான் தொழிலை தொடர்ந்து நடத்திட இயலும். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கும் மின்விடுமுறையை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: