திருநெல்வேலி, மார்ச் 2-
மதுரை-நாகர்கோவில் இடையே நடைபெறும் மின்மயப் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதால், வரும் அக்டோபர் மாதம் மின்மயப் பணிகள் முடிவு பெரும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மதுரை-தூத்துக்குடி, வாஞ்சிமணியாச்சி-திருநெல்வேலி -நாகர்கோவில் இடையே அகல ரயில் பாதையை மின் மயமாக்க ரயில்வேத் துறை ரூ.220 கோடி ஒதுக்கி அதற்கானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக மதுரை-தூத்துக்குடி இடையே மின்மயப் பணிகள் நடைபெற்றன. இந்த பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும், இந்த மார்க்கத்தில் துணை மின்நிலையம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. இதுவும் இன்னும் ஓரிரு மாதங்களில் முடிந்து விடும் . இதேபோல் வாஞ்சிமணியாச்சி- திருநெல்வேலி -நாகர்கோவில் இடையே மின்மயப் பணிகளில் திருவனந்த புரம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதி முழுவதும் மின்மயப் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. நாகர்கோவில் ரயில் நிலையம் துவங்கி நெல்லை தாமிரபரணி ஆற்றுப்பாலம் வரை திருவனந்தபுரம் கோட்டம் வருவதால் அங்கு பணிகள் முடிவடைந்து துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் வேக வேகமாக நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் மின்மயப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.இன்னும் இரண்டு மாதத்திற்குள் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து தாமிரபரணி ஆற்றுப்பாலம் வரை மின்மயப் பணிகள் முடியும் தருவாயில் இருப்பதால், வரும் அக்டோபர் மாதத்திற்குள் மதுரை-திருநெல்வேலி- நாகர்கோவில் -கன்னியாகுமரி மின்மயமாக்கல் பணி முடிந்து, மின் ரயில் சோதனை ஓட்டத்திற்குப் பின், டிசம்பர் மாதத்திற்குள் மின்சாரத்தில் ரயில்கள் இயங்கும் என்று ரயில்வே வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

You must be logged in to post a comment.