நியூசிலாந்துக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா இரண்டாவது போட்டியையும் வென்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா அசைக்க முடியாதபடி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.நாணயச்சுண்டலில் வென்ற தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்தை முதலில் ஆட அழைத்தது.
ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்கள் எடுத்திருந்த நியூசிலாந்து 230 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அது 48 ஓவர்களில் எடுத்த ஓட்டங்களை தென் ஆப்பிரிக்கா 39 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து வென்றது.முதல் பாதியில் மோர்னோ மோர்க்கல்லின் புயல்வேகப்பந்து வீச்சுக்கு நியூசிலாந்து ஐந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு குப்டில்-மக்கல்லம் இணை 107 ஓட்டங்களைச் சேர்த்தது. ஆனால் ஐந்து ஓவர்களில் மக்கல்லம் (85) வில்லியம்சன் (13) ரைடர் (0) ஆகியோரை இழந்தது.
மோர்க்கல் ஐந்து விக்கெட்டுகளையும் டிசோட்சோபி மூன்று விக்கெட்டுகளையும் எடுத்தனர்.தென் ஆப்பிரிக்காவின் ஓட்ட வேட்டையில் நங்கூரமிட்டு ஆடிய அம்லா 92 ஓட்டங்கள் எடுத்தார் பாப் டு பிளஸ்ஸிஸ் 24 பந்துகளில் 34 ஓட்டங்கள் எடுத்தார். டிவில்லர்ஸ் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களும் ஜஸ்டின் ஆண்டோங் 17 ஓட்டங்களும் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.