உடுமலை, மார்ச். 2-உடுமலை எவியஜென் தாய்க்கோழி வளர்ப்பு நிறுவனம் கடைபிடித்து வரும் தொழிலாளர் விரோதப்போக்கை கண்டித்து சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.உடுமலை அருகேயுள்ள எலையமுத்தூர் பகுதியில் எவியஜென் தாய்க்கோழி வளர்ப்பு நிறுவனம் என்ற பன்னாட்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவன நிர்வாகம் தொழிலாளர்கள் மீது தொடர்ந்து பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.இந்நிறுவனம் கடைபிடித்து வரும் தொழிலாளர் விரோதப்போக்கை கண்டித்து நிறுவன ஊழியர்கள், சிஐடியு தொழிற்சங்கத்துடன் இணைந்து வியாழக்கிழமை (மார்ச்1) முதல் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்திற்கு எவியஜென் நிறுவனத்தின் சிஐடியு சங்க தலைவர் குமரகுரு தலைமை வகித்தார். இதில் சிஐடியு பொருளாளர் ஜெகதீசன், கி.கனகராஜ் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினர்.இந்நிறுவனத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்பள உயர்வு மற்றும் தினக்கூலிகளாக வேலை செய்யும் அனைத்து பணியாளர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து நிர்வாகம், தங்களுக்கெதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நிறுவன ஊழியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை தொடர்ந்துள்ளது. இவ்வாறு நிர்வாகத்தின் சார்பில் தொழிலாளர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கைவிடக்கோரியும், தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை அமலாக்க வேண்டும், தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும். எவியஜென் தாய்க்கோழி வளர்ப்பு நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப்போக்கை தமிழக அரசு தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இத்தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.