திருப்பூர், பிப்.2-திருப்பூரில் 10 மணி நேரத்துக்கு மேல் மின்வெட்டு நீடிப்பதை கண்டித்து திருப்பூரில் இரு இடங்களில் தொழில் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மின்பற்றாக்குறையை அடுத்த தமிழக அரசு, தமிழகம் முழுவதும் மின்விடுமுறையை அமல்படுத்தியது. அதன்படி, திருப்பூரில் மின்விடுமுறை வெள்ளிக்கிழமை அமலானது. இதன் காரணமாக திருப்பூரில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிலகங்கள் மூடப்பட்டன. திருப்பூரில் பனியன் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. மின்விடுமுறை நாள் தவிர மற்ற நாட்களிலும் 10 மணி நேரமும், அதற்கு கூடுதலாகவும் மின்தடை செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தொழில்துறையினர் கடும் அவதிக்குள்ளாகினர். பெரிய தொழிற்சாலைகள் சில ஜெனரேட்டர் உதவியுடன் இயங்கின. ஆனால் சிறு, குறு தொழிலகங்கள் முழுமையாக முடங்கின. இதன் காரணமாக சிறு, குறு தொழில்துறையினர் ஆவேசமடைந்துள்ளனர்.இந்நிலையில், மின்விடுமுறை திட்டத்தை கண்டித்தும், கடுமையான மின்வெட்டை கண்டித்தும் திருப்பூர் காங்கயம் ரோட்டில் இரு இடங்களில் வெள்ளியன்று சிறு, குறு பனியன் உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது,.திருப்பூரில் ஏற்கனவே சாய ஆலை மூடல், நூல் விலையில் நிலையற்றத் தன்மை உள்ளிட்ட காரணங்களால் தொழில் முடங்கியுள்ளது. இந்த சூழலில் தற்போது 10 மணி நேரம் வரை மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே மின்விடுமுறை திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் வாரத்தில் 2 நாட்கள் தொழிலகங்கள் இயங்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள நாளிலும் 10 மணி நேரம் வரை மின்தடை தொடர்வதால் தொழில் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 7 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. இது தவிர இரவு நேரங்களில் 3 மணி நேரம் மின்தடையாகிறது. இதனால் நாங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளோம்.பொதுத்தேர்வு நெருங்கியுள்ள சூழலில் பள்ளி மாணவர்கள் படிக்க இயலாமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். தினமும் நள்ளிரவு 12 மணிக்கும், அதிகாலை 4 மணிக்கும் மின்சாரம் தடை செய்யப்படுவதால் நாங்கள் தூக்கம் இழந்து தவிக்கிறோம். பல மணி நேரம் நீடிக்கும் மின்தடை காரணமாக பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.தொழில் தேவையை கருத்தில் கொண்டு திருப்பூர் மின்விநியோகத்தை சீர் செய்ய வேண்டும் எனக் கோரி கடந்த மாதம் மறியல் நடத்தினோம். 10 நாட்களில் தீர்வு காண்பதாக சொன்னார்கள். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தற்போது மீண்டும் மறியலில் ஈடுபட்டுள்ளோம். திருப்பூர் சிறு, குறு தொழில்கள் பாதிக்காத வகையிலும், பொதுமக்களை பாதிக்காத வகையில் மின்தடையை சீரமைக்கநடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.மறியல் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், மின்வாரிய அதிகாரிகள் நாகராஜ், மோகன், கவிதா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் ஆவேசமாக முறையிட்ட பொதுமக்கள், ‘எப்போது மின்சாரம், வரும் போகும் என்று கூட தெரியாத நிலை நிலவி வருகிறது. மின்தடை நேரம் குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மின்தடை நேரத்தை அரசு அறிவித்தபடி குறைக்க வேண்டும்’ என வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த மின்வாரிய அதிகாரிகள் ‘’மின் பற்றாக்குறை காரணமாக மின்வெட்டு என்பது தவிர்க்க முடியாத நிலை இருந்து வருகிறது. மின்விடுமுறை திட்டம் அமலாகியுள்ளதால் ஓரிரு தினங்களில் மின்விநியோகம் சீராகும். 3 நாட்களில் இது தொடர்பாக அறிவிப்போம். தொழில்களை மின்தடையை பாதிக்காத வகையில் மாற்றியமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றனர்.இதனையேற்ற பொதுமக்கள் மற்றும் தொழில் துறையினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் போக்குவரத்தும்பாதிக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: