முதலாவது மகளிர் கபடி உலகக்கோப்பை போட்டிகளில் முதல் ஆட்டத்தை இந்தியா வென்றுள்ளது. தென்கொரியா அணியை இந்தியா 34-18 என்ற புள்ளிகளில் வீழ்த்தியது.பாட்னாவில் உள்ள பாடலிபுத்ரா விளையாட்டு வளாகத்தில் மகளிர் கபடி உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இப்போட்டிகளில் 16 அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகளை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தொடக்கி வைத்தார்.ஆசிய கோப்பை சாம்பியன் அணி இந்தியாவின் வெற்றிக்கு கிருஷ்ணாவும் அபிலாஷாவும் சிறப்பான பங்குகளை அளித்தார்கள்.நாணயச் சுண்டலில் வென்ற தென் கொரியா, முதலில் பாடி வந்தது. அதில் நான்கு உபரிகளுடன் ஐந்து புள்ளிகளை எடுத்தது. அதே வேளையில் முதல் பாதியில் இந்தியா நான்கு உபரிகளுடன் 24 புள்ளிகளை எடுத்து முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் தென்கொரியா ஆவேசமாக தாக்குதலைத் தொடர்ந்தது. ஆனால் இந்தியா அதைப்பற்றி பெரிதும் கவலைப்படவில்லை. இதில் தென்கொரியா 6 உபரிகளுடன் 13 புள்ளிகளைப் பெற்றது. இந்தியா மூன்று உபரிகளுடன் 10 புள்ளிகளைப் பெற்றது. முதல் பாதியில் எடுத்த கூடுதல் புள்ளிகளுடன் இந்தியா 34-18 என வென்றது.கிருஷ்ணா, அபிலாஷா தலா 5 புள்ளிகளும், பிரியங்கா நான்கு புள்ளிகளும், சுவர்ணா பர்டாகே, மமதா பூஜாரி, தீபிகா, ஹெனாரி ஜோசப், பிரியங்கா குமாரி ஆகியோர் தலா 3 புள்ளி களும் எடுத்தனர். தென் கொரியா அணியில் ஹயுனா ஜோ ஏழு புள்ளிகளும் ஹயுன் ஜியோங் லீ ஆறுபுள்ளி களும் எடுத்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.