ஆத்தூர், மார்ச் 2ஆத்தூரில் இன்று அதிகாலை பெயிண்ட் கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் கடையிலிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின. இதனால், ரூ.80 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம் ஆத்தூரில், சேலம் – சென்னை நெடுஞ்சாலைலிலுள்ள காமராஜனார் ரோட்டிலுள்ளது கிருஷ்ணா ஹார்டுவேர்ஸ் மற்றும் பெயிண்ட் கடை. இரண்டுதளங்களை கொண்ட இக்கடை சுமார் 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கடையின் தரைத்தளத்தில் பெயிண்ட், தின்னர் உள்ளிட்ட பொருட்களும் முதல் தளத்தில் கூரைக்கு பயன்படும் சிமெண்ட் அட்டைகள், பிளைவுட்கள் போன்றவை வைக்கப்பட்டிருக்கும். அப்பகுதியில் பிரபலமான கடையாக இருப்பதால், எப்பொழுதும் பெயிண்ட் உள்ளிட்ட பொருட்கள் கடையில் இருப்பு இருக்கும்.இந்நிலையில், வழக்கம்போல் வியாழனன்று இரவு 11 மணிக்கு கடையில் வேலைசெய்பவர்கள் கடையை மூடிச்சென்றுள்ளார். வாட்ச்மேன் செல்லமுத்து (70) மட்டும் இரவுப் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் வெள்ளியன்று அதிகாலை 3.30 மணியளவில் கடையின் பின்புறமிருந்த புகை வெளியாகியது.
புகை வாசத்தால் விழித்தெழுந்த செல்லமுத்து, கடையின் பின்புறம் சென்று பார்த்தபோது கடையின் உள்ளே தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கடை உரிமையாளருக்கு தகவல் கொடுத்தார். பின்னர், உரிமையாளர் ஆத்தூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் கடையின் தரைத் தளத்தில் தீ மளமளவென பரவியது. இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. கடையில் உள்ள பொருட்கள் அனைத்தும் எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்டதால் கடையின் அனைத்துப் பகுதிகளுக்கும் தீ பரவிக் கொண்டே இருந்தது.இதனையடுத்து, சேலம், கெங்கவல்லி, வாழப்பாடி ஆகிய தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், கொளுந்துவிட்டு எறிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தீயணையவில்லை. மேலும், தீயணைப்பு வண்டியிலிருந்த தண்ணீரும் தீர்ந்துவிட்டது. இதனால், பேரதிர்ச்சியடைந்த அவர்கள், ஆத்தூர் நகராட்சிக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், நகராட்சி குடிநீர் வண்டி மற்றும் 10 தண்ணீர் லாரிகளில் தண்ணீர் கொண்டுவரப்பட்டு மீண்டும் தீயை அணைக்கும் பணி துவங்கியது. தீயணைப்பு வீரர்களின் தொடர்ந்து 4 மணிநேர போராட்டத்திற்குப் பின்னர் காலை 8 மணிக்கு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
பின்னர் தகவலறிந்து. மாவட்ட தீயணைப்பு அதிகாரி எழிலரசு அங்கு வந்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், இந்த தீ விபத்தில் ரூ.80 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளன. மேலும், அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால், மின்கசிவு ஏற்பட்டு இப்பெரும் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக்கூறினார்.இரவுநேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: