கோவை, மார்ச். 1-
கோவையில் அமலுக்கு வந்த வந்த மின்விடுமுறையால் 40 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால், ரூ.200 கோடி அளவிற்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டால் பொதுமக்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் என அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மின்பற்றாக்குறையை சீர்செய்யும் வகையில், பல புதிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டது. இதன்படி, சென்னையில் நிலவிவந்த 1 மணிநேர மின்வெட்டை 2 மணிநேரமாக அதிகரித்தது. 8 மணிநேர முதல் 10 மணிநேரம் மின்வெட்டால் பாதிக்கப்பட்டிருந்த மற்ற மாவட்டங்களுக்கு மின்வெட்டு 4 மணிநேரமாக குறைக்கப்பட்டது. அதேபோல், தொழிற்சாலைகள் மற்றும் வணிக பயன்பாடுகளுக்கான மின்வெட்டு 40 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள தொழிற்சாலைகளுக்கும் வாரத்தில் ஒருநாள் மின்விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, கோவையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு ஒவ்வொரு வாரமும் வியாழனன்று மின்விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வியாழனன்று (நேற்று முதல்) அமலுக்கு வந்தது. இதனால், கோவை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மில்கள், விசைத்தறி ஆலைகள், ஒர்க்ஷாப், இன்ஜினியரிங் உள்ளிட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலைகள் மூடப்பட்டன. இந்த மின்விடுமுறை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இருப்பதால் 800 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்படும்.விடுமுறையின் காரணமாக, தொழிலாளர்கள் இன்று பணிக்கு வராததால், மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்பேட்டைகள், பவுண்டரிகள் உள்ளிட்டவை வெறிச்சோடிக் கிடந்தன.இதுகுறித்து கொடிசியா தலைவர் கந்தசாமியிடம் கேட்டபோது, தொழிற்சாலைகளுக்கு ஏற்படும் இழப்பைக் கருத்தில் கொண்டு, அவர்களது வேண்டுகோளுக்கிணங்க இந்த மின்விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதற்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டிய கடமை தொழிற்சாலைகளுக்கு உண்டு. மேலும், வாரத்தில் ஒரு நாள் மின்விடுமுறை உள்ளதால், ஏற்கனவே நிலவிவந்த மின்வெட்டு 50 சதவிகிதமாக குறையவாய்ப்புள்ளது. இதனால் மற்ற நாட்களில் உற்பத்தி சீராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மின்விடுமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தொழிற்சாலைகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும். இதற்கு பதிலாக, ஏதாவது ஒரு நாள் டீசல் மூலம் இயங்கும் ஜெனரேட்டர்களை பயன்படுத்தி தொழிற்சாலைகளை இயக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இதுகுறித்து, கோவை திருப்பூர் காட்மா சங்க தலைவர் ரவிக்குமார் தெரிவிக்கையில், தற்போது அமலில் உள்ள வியாழன் மற்றும் ஞாயிறு மின்விடுமுறையை, சனி மற்றும் ஞாயிறு என தொடர்ந்து விடுவது வசதியாக இருக்கும். இல்லையெனில், வேலைக்கு தொழிலாளர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என்றார்.மின்விடுமுறையின் காரணமாக டீசல் பயன்பாடு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. வியாழனன்று மட்டும் ரூ.200 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த மின்வெட்டு தொடரும்பட்சத்தில், கோவையைச் சுற்றியுள்ள பஞ்சாலைகளில் மட்டும் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலைஇழக்கும் அபாயம் உள்ளதாக தொழிலாளர்கள் வேதனைப்படுகின்றனர்.
விதிமுறை மீறும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை :
கோவையில் இன்று மின்விடுமுறையாக அறிவிக்கப்பட்டாலும், தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதியான கணபதி, வேலாண்டிபாளையம் உள்ளிட்ட இடங்களில் சில தொழிற்சாலைகள் விதிமுறையை மீறி இயங்கின. இதுகுறித்து தகவல் அறிந்ததும், மின்வாரிய தலைமை பொறியாளர் தங்கவேலு, மின்வாரிய மேற்பார்வையாளர் திருமூர்த்தி ஆகியோர் உத்தரவின் பேரில் மின்வாரியத்தினர் அப்பகுதிகளில் ஆய்வு செய்து, தொழிற்சாலைகள் மூட உத்தரவிட்டனர். மேலும், பீடர் கண்காணிப்பின் மூலம் அதிக அளவு மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. இதனை மீறி இயங்கும் தொழிற்சாலைகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து மின்வாரிய தலைமை பொறியாளர் தங்கவேலு தெரிவிக்கையில், மின்விடுமுறை அமலில் உள்ளதால் அனைத்து தொழிற்சாலைகளும் இதனை கடைபிடிக்கவேண்டும்.இல்லாவிட்டால், மின்சிக்கனத்தை கடைபிடிக்க முடியாது என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.