மாலே, மார்ச் 1-
மாலத்தீவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்ற முகமது வாகீத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கான நாற்காலியை முன்னாள் அதிபர் நஷீத்தின் ஆதரவாளர்கள் அகற்றி ரகளையில் ஈடுபட்டனர்.மாலத்தீவு நாடாளுமன்றமான மக்கள் மஜ்லீஸ் வியாழனன்று கூடுவதாக இருந்தது. இக்கூட்டத்தில் முதல் முறையாக புதிய ஜனாதிபதி வாகீத் உரையாற்றவிருந்தார்.
இதற்கு முன்னதாக முன்னாள் அதிபர் நஷீத்தின் மாலத்தீவு ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள், வாகீத் அமரும் நாற்காலியையும் அமைச்சர்களின் நாற்காலிகளையும் அகற்றிவிட்டனர். வாகீத் உடனே பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.இதனால் நாடாளுமன்றக் கூட்டம் தொடங்குவது தாமதமானது. நாடாளுமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினரை நோக்கி நஷீத்தின் ஆதரவாளர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
தற்போதைய அரசு ஆதரவாளர்களின் கடைகளையும் சூறையாடினர். நாடாளுமன்றத்தின் தொலைபேசி மற்றும் இணைய இணைப்புகளை முற்றாகத் துண்டித்தனர்.மாலத்தீவு ஜனாதிபதியாக இருந்த நஷீத், துப்பாக்கி முனையில் கடந்த மாதம் 7-ந் தேதி பதவியிலிருந்து இறக்கப்பட்டார். இந்தியா, அமெரிக்க நாடுகளின் தலையீட்டின்பேரில் அங்கு அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ள அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

Leave A Reply