திருப்பூர், மார்ச் 1-
திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வங்கிக் கிளைகளிலும் கண்காணிப்புக் கேமிராக்கள் பொறுத்த வேண்டும் என்று மாவட்ட அளவிலான வங்கிகள் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் வே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் புதனன்று மாவட்ட ஆட்சியர் மா.மதிவாணன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னையில் இருந்து வந்திருந்த ரிசர்வ் வங்கி மேலாளர் ராஜேந்திர எம்.பட் பங்கேற்று, ஒவ்வொரு காலாண்டிலும் வங்கிகள் பாதுகாப்புக் கூட்டத்தில் பொறுப்புள்ள மேலாளர்கள் அவசியம் பங்கேற்க வேண்டும், கிழிந்த பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு அடிக்கடி குறிப்பிட்ட வங்கி கிளைகளில் எக்சேஞ் மேளா நடத்த வேண்டும், ஏடிஎம்மில் வைக்கும் பணத்தை தரம் சரிபார்த்து வைக்க வேண்டும். தீத்தடுப்பு, குற்றத் தடுப்பு அலாரங்கள் ஒழுங்காக வேலை செய்கின்றனவா என்று அடிக்கடி கண்காணிப்புச் செய்ய வேண்டும் என்று கூறினார். இக்கூட்டத்தில் பேசிய காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், “அனைத்து வங்கிக் கிளைகளிலும் சிசிடிவி எனப்படும் கண்காணிப்புக் கேமிராக்களைப் பொறுத்துவதுடன் அவற்றின் பதிவுகள் குறைந்தது 30 நாட்களில் இருந்து 3 மாத காலத்துக்கு இருக்கும்படி பாதுகாத்து வைக்கவேண்டும். அனைத்து கிளைகளிலும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை காவல் தணிக்கை நடத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை சரி பார்க்க வேண்டும். கள்ள நோட்டு சம்பந்தமாக உடுமலைபேட்டையில் ஒருவர் கைது செய்யப்பட்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறைபடுத்தப்பட்டுள்ளார். கள்ளநோட்டு குறித்து தகவல் கிடைத்தால் உடனுக்குடன் காவல் நிலையத்திற்கு வங்கி நிர்வாகங்கள் தயக்கமின்றி தெரிவிக்க வேண்டும். காவல் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர குற்றவியல் ஆய்வுக் கூட்டத்தில் வங்கி பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும்” என்றும் கூறினார்.முன்னதாக மாவட்ட ஆட்சியர் மதிவாணன் மாவட்டத்தின் அனைத்து வங்கி, நிதிநிறுவனங்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவதாகக் கூறினார். கள்ளநோட்டு தொடர்பான புகார் பெட்டியை மாவட்ட ஆட்சியரகத்திலேயே அமைக்கலாம் என்று மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கஜலட்சுமி கூறினார்.இக்கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் ஆர்.ராஜகோபால், பாரத ஸ்டேட் வங்கி திருப்பூர் முக்கியக் கிளை முதன்மை மேலாளர் ஆர்.செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.