கோவை, மார்ச் 1-
கோவை மாவட்ட கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி 6400 மரக்கன்றுகள் நடுதல், மலர் வெளியீடு மற்றும் புதிய சங்கம் துவக்கவிழா என முப்பெரும் விழா நடைபெற்றது. கோவை கமலம் துரைசாமி திருமண மண்டபத்தில் வியழானன்று நடந்த இந்த முப்பெரும் விழாவிற்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி. கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். விழாவில் தமிழ்நாடு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் சங்க மாநிலத் தலைவர் பி. சகிலன் வாழ்த்திப் பேசினார். விழாவில் கே. ஷாநவாஸ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தமிழக அரசு சார்பில் கேபிள் டிவி கார்ப்பரேஷனை முழு அளவில் இயக்குவதற்கு பலரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் அரசு கேபிள் டிவி கட்டணத்தை ரூ.70 லிருந்து ரூ.100 என உயர்த்த வேண்டுமெனவும், கட்டணச் சேனல்கள் அனைத்தையும் அரசு கேபிள் ஒளிபரப்பில் இடம் பெறவேண்டுமெனவும் நிர்வாகிகள் தங்களது உரையில் வலியுறுத்தினர்.விழாவில் ஆர். அனுபாபு, சுந்தராபுரம் பாபு என். வரதராஜன், நடராஜ், கே. லோகநாதன், தங்கராஜ் நடேசன் மற்றும் சி.எம். ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். விழா நிகழ்ச்சிகளை ஏ.பி. மணிபாரதி தொகுத்து வழங்கினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.