மே.பாளையம், மார்ச். 1-
மேட்டுப்பாளையம் அருகே உள்ள பவானி ஆற்றில் குளிக்கச் சென்றபோது எதிர்பாரவிதமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய 6 பேரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பிபிஓ கால் சென்டரில் அப்பகுதிச் சேர்ந்த போசி (19), டேனியல் (18), விவின் (19), மேத்யூ (22), சபின் (19), முகேஷ் (18) ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு சிறப்பு பயிற்சியளிக்க உதகையில் உள்ள சேரிங்கிராஸ் துணை அலுவலகத்திற்கு செல்லும்படி நிறுவன உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து 6 பேரும் உதகைக்கு ஆம்னி பேருந்தில் சென்றனர். அப்போது மேட்டுப்பாளையம் கடந்தபோது மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளித்துவிட்டு செல்லலாம் என திட்டமிட்டுள்ளனர். உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு பவானி ஆற்றில் 2 கிளைகளாக பிரிந்து செல்லும் இடத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரவிதமாக ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. இதனால் பெரும் அச்சமடைந்த வாலிபர்கள் ஆற்றின் மைப்பகுதியில் இருந்த பாறையில் ஏறி உயிர்தப்பினர். பின்னர் எங்களை காப்பாற்றுங்கள் சத்தம்போட்டனர். அப்போது அப்பகுதியில் சென்று கொண்டிருந்தவர்கள் அவர்களின் சத்தம் கேட்டு ஆற்றில் பார்த்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கும், காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் வாலிபர்களை ஆற்றில் இருந்து கயிறு மூலம் உயிருடன் மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: