காரகாஸ், மார்ச் 1 – நுகர்வோருக்கு நியாய மான விலையை உத்தரவாதப்படுத்தவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு பொருட்களுக்கு அதிகபட்ச விலையை வெனிசுலா அரசு நிர்ணயித்திருக்கிறது.விலைவாசியைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு ஜூலையில் நியாயமான விலைகள் மற்றும் செலவுகள் சட்டத்தை ஹியூகோ சாவேஸ் தலைமையிலான அரசு நிறைவேற்றியது. அந்த சட்டத்தின் அடிப்படையில்தான் பல்வேறு பொருட்களுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயித்திருக்கிறார்கள். குழந்தைகளுக்கான உணவு, பழச்சாறுகள், குளியல் சோப்புகள், பாட்டில் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்தப் புதிய விலைகள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரப்போகிறது. அதற்குள் விலைகளை நிர்ணயம் செய்து கொள்ளுமாறு நிறுவனங்களை அரசு அறிவுறுத்தியுள்ளது. அதிகபட்ச விலைகளை நிர்ணயிக்கும்போது இடுபொருள் விலை, உற்பத்திச் செலவு, விநியோகச் செலவு போன்றவற்றை அரசு கணக்கில் எடுத்துக் கொண்டதாக விலை நிர்ணயத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.விலைகளை நிர்ணயிப்பதற்கு முன்பாக, வெனிசுலாவில் உள்ள சுமார் 15 ஆயிரம் நிறுவனங்களுக்கு அரசுத்தரப்பில் கடிதம் எழுதப்பட்டது. கடந்த காலங்களில் விலையேற்ற இறக்கம் பற்றியும் விபரங்களைக் கோரிப் பெற்றனர். சில ஆண்டுகளாகவே தாறுமாறாக விலைகள் நிர்ணயிக்கப்பட்டதும் அதில் அம்பலமானது. அதிகபட்ச விலைகளைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட அனைத்துப் பொருட்களின் விலைகளையும் குறைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. அரசின் புதிய முடிவை ஏற்றுக்கொள்ளாமலோ அல்லது நடைமுறைப்படுத்தாமலோ இருந்தால் அந்த நிறுவனங்கள் அரசுடைமையாக்கப்படும் என்று ஜனாதிபதி சாவேஸ் எச்சரித்துள்ளார்.

Leave A Reply