விராத் கோலியின் புயல்வேக ஆட்டத்தில் இலங்கை தோற்றதுடன், இந்தியாவுக்கு ஒரு வெகுமதிப்புள்ளியும் கிடைத்தது. இலங்கை 50 ஓவர்களில் அடித்த 320 ஓட்டங்களை இந்தியா 36.4 ஓவர்களில் எடுத்து வென்றது.நாணயச் சுண்டலில் வென்ற இந்தியா, இலங்கையை ஆட அழைத்தது.
இந்தியா 50 ஒவர்களில் எட்ட முடியாத இலக்கை நிர்ணயிக்க விரும்பிய இலங்கை அபாரமாக ஆடியது. மகிளா ஜெயவர்த்தனே விரைவில் ஆட்டம் இழக்க தில்ஷனும் சங்ககராவும் இணை சேர்ந்தனர். தில்ஷன் 165 பந்துகளில் 160 ஓட்டங்களும் சங்ககரா 87 பந்துகளில் 105 ஓட்டங்களும் எடுத்தனர். மற்றவர்கள் சேர்த்த சிறிய ஓட்டங்களுடன் இலங்கை 4 விக்கெட் இழப்புக்கு 320 ஓட்டங்கள் எடுத்தது.வெகுமதி புள்ளியைப் பெற இந்தியா 321 ஓட்டங்களை 40 ஓவர்களில் எடுக்க வேண்டும். சேவக்கும் டெண்டுல்கரும் விரைவில் ஆட்டம் இழக்க, இந்திய உற்சாகம் சற்று குறைந்தது.
ஆனால் காம்பீரும், கோலியும் இந்திய அணியின் ஓட்ட வேகத்தை துரிதப்படுத்தினர். இருவரும் 94 பந்துகளில் 100 ஓட்டங்களைக் குவித்தபோது காம்பீர் ஆட்டம் இழந்தார்.ரெய்னா களம் இறங்கியவுடன் இந்திய வேகம் கூடியது. ஒரு ஓவருக்கு சராசரியாக 9 ஓட்டங்களை இந்த இணை எடுத்தது. மலிங்கா வீசிய 3வது ஓவரில் கோலி 24 ஓட்டங்கள் எடுத்தார். முன்னதாக குலசேகரா வீசிய 35வது ஓவரில் 18 ஓட்டங்கள் அடித்தனர்.
கோலியின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இலங்கை திணறியது. அவர் 86 பந்துகளைச் சந்தித்து 16 நான்குகளும் 2 ஆறுகளும் அடித்து 133 ஓட்டங்களைச் சேர்த்தார். ரெய்னா 24 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தார். இருவரும் ஆட்டம் இழக்கவில்லை.இந்தியாவும் இலங்கையும் தலா 15 புள்ளிகளுடன் சமமாக உள்ளன. மார்ச் 2 அன்று நடைபெறும் கடைசி சுழல் போட்டியில் ஆஸி.யும் இலங்கையும் மோதுகின்றன. ஆஸி. அணி வென்றால் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதும். இலங்கை வென்றால் இந்தியா நாடு திரும்பும்.

Leave a Reply

You must be logged in to post a comment.