திருப்பூர், பிப்.29-
திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டத்துக்கு உட்பட்ட அம்மாபாளையம் தலித் மக்களுக்கு மயான வசதி ஏற்படுத்தித் தருவதில் மாவட்ட வருவாய்த்துறை நிர்வாகத்துக்கும் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்படுத்தும் விதத்தில் குழப்பம் செய்து வருகிறது. இதற்கிடையே செவ்வாயன்று அங்கு காலமான தலித் பெண்ணின் சடலத்தை அடக்கம் செய்வதற்கு உரிய மயான வசதி செய்து தராமல் இங்குமங்குமாக அலைக்கழிக்கப்பட்டது.மயான வசதி இல்லாத கிராமம்அவிநாசி வட்டம் ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு உட்பட்டது விருமாண்டம்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் ஆதியூர் பிரிவில் இருந்து குன்னத்தூர் செல்லும் சாலைக்கு அருகாமையில் அம்மாபாளையம் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள தலித் காலனியில் குடியிருக்கும் மக்களுக்கு கடந்த 65 ஆண்டுகளுக்கு மேலாக மயான வசதியே இல்லை. இந்த காலனி மக்கள் யாரேனும் இறந்தால் ஆதியூர் பிரிவு – குன்னத்தூர் நெடுஞ்சாலை ஓரத்திலேயே புறம்போக்கு இடத்தில் இறந்தவர்களின் சடலத்தை இப்பகுதி மக்கள் அடக்கம் செய்து வந்தனர்.நீதிமன்ற உத்தரவுஇந்த அவல நிலை குறித்து அண்மையில் நாளிதழ்களில் செய்தி வந்ததைத் தொடர்ந்து திருப்பூர் வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் அம்மாபாளையம் கிராம தலித் மக்களுக்கு மயான வசதி செய்து தருவது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவின் மீது நான்கு வார காலத்தில் பதில் தரும்படி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவின் அடிப்படையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மதிவாணன், அம்மாபாளையம் தலித் மக்களுக்கு மயான வசதி ஏற்படுத்தித் தர வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டார். கோட்டாட்சியர் செங்கோட்டையன் தலைமையில் வருவாய்த் துறையினர் அம்மாபாளையம் கிராமத்தில் பொது மயானத்துக்கு அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தில் அளவீடு செய்து தலித் மக்களுக்குரிய மயானமாக பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.தலித் பெண் மரணம்இந்நிலையில் பிப்.28ம் தேதியன்று (செவ்வாய்க்கிழமை) அம்மாபாளையம்தலித் காலனியைச் சேர்ந்தமாராள் (வயது 62) என்ற பெண் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரை மேற்படி புறம்போக்கு நிலத்தில் அடக்கம் செய்வது தொடர்பாக அவரது குடும்பத்தார் மற்றும் தலித் சமூகத்தினர் முன்னேற்பாடுகள் செய்துள்ளனர். ஆனால் புதிதாக ஒதுக்கியுள்ள மயான இடத்துக்குச் செல்வதற்கு ஊரில் இருக்கும் கோயில் வழியாக சடலத்தைச் சுமந்து செல்ல வேண்டியிருக்கும் என்று கூறி உள்ளூரில் ஆதிக்க சாதி மனோபாவம் கொண்டோர் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.அதிகாரிகள் குளறுபடிஇதையடுத்து கோட்டாட்சியர் செங்கோட்டையன், அவிநாசி வட்டாட்சியர் பூங்காவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்ததுடன், ஊத்துக்குளி காவல் நிலையத்தில் இருந்து காவலர்களும் அங்கு குவிக்கப்பட்டனர். வருவாய்த்துறையினர் அளவீடு செய்து உத்தேசித்துள்ள மயான இடத்தில் தலித் பெண்ணின் சடலத்தை அடக்கம் செய்வதற்கு, உள்ளூரில் அனைத்துத் தரப்பு மக்களிடமும் சுமூகப் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண்பதற்கு மாறாக, ஆதிக்க சாதி மனோபாவம் கொண்டோரின் எதிர்ப்புக்கு அரசு அதிகாரிகள் பணிந்தனர்.சம்பந்தப்பட்ட இடம் நீர்நிலைப் புறம்போக்கு என அடையாளம் காணப்பட்டிருப்பதால் அங்கு சடலத்தை அடக்கம் செய்யக் கூடாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி மாற்று இடம் குறித்து ஆலோசித்து, குன்னத்தூர் சாலையில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒத்தைப் பனைமேடு என்ற இடத்தில் மயான இடம் ஒதுக்குவதாகவும் கூறியுள்ளனர்.ஆனால் அதிகாரிகள் குறிப்பிடும் இடம் என்பது ஏற்கனவே பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வசித்து வரும் இடம் ஆகும். அவர்கள் அந்த இடத்துக்கு குடிமனைப் பட்டா கேட்டு தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.மார்க்சிஸ்ட் கட்சி தலையீடுஅதிகாரிகளின் இந்த குளறுபடியான அணுகுமுறை காரணமாக அம்மாபாளையத்தில் தேவையற்ற சர்ச்சை ஏற்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி ஒன்றியச் செயலாளர் ஆர்.குமார் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலக்குழு உறுப்பினர் அ.சு.பவுத்தன் உள்ளிட்டோர் அங்கு சென்று அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அம்மாபாளையம் தலித் மக்களுக்கு உரிய மயான வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும், அதேசமயம் இக்காரணத்தைச் சொல்லி ஏற்கனவே ஒத்தைப் பனைமேடு பகுதியில் வசித்து வரும் தலித் மக்களின் குடியுரிமையை பறிக்கக் கூடாது என்றும் அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.அம்மாபாளையம் தலித் மக்களும் அதிகாரிகளின் யோசனையை நிராகரித்து விட்டனர். தலித் சமூகத்தினருக்கு உள்ளேயே குழப்பம் ஏற்படுத்தி பிளவுபடுத்தும் விதத்தில் அதிகாரிகள் கூறியிருக்கும் யோசனையை ஏற்க முடியாது என்று உறுதிபடக் கூறிவிட்டனர். அத்தோடு மாராளின் சடலத்தை அடக்கம் செய்ய உரிய ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.முட்டுக்கட்டைஇப்பிரச்சனைக்கு நியாயமான தீர்வு காண்பதற்கு உரிய முயற்சி மேற்கொள்ளாத கோட்டாட்சியர், அம்மாபாளையத்தில் ஏற்கனவே அளவீடு செய்த இடத்திற்கு சடலத்தைக் கொண்டு செல்லக் கூடாது என்று பிடிவாதமாக மறுப்புத் தெரிவித்துவிட்டார். அத்தோடு நீதிமன்ற தலையீடு இருப்பதால் முன்னர் சடலங்களை அடக்கம் செய்த நெடுஞ்சாலையோரமும் சடலத்தை அடக்கம் செய்யக் கூடாது என்று முட்டுக்கட்டை போட்டார்.அடக்கம் செய்வதாக இருந்தால் நாங்கள் ஒதுக்கித்தரும் ஒத்தைப் பனைமேடு பகுதியில்தான் சடலத்தை அடக்கம் செய்ய வேண்டும் என அதிகாரிகள் கூறியது, பிரச்சனையைத் தீர்ப்பதற்கு பதிலாக சிக்கல் ஏற்படுத்துவதாகவே இருந்தது.தீர்வு காண வலியுறுத்தல்பதற்றம் அதிகரித்த நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் இரவு 11 மணியளவில் சம்பவ இடத்துக்கு விரைந்தார். அத்தோடு தலித் விடுதலைக் கட்சியைச் சேர்ந்த செங்கோட்டையனும் அங்கு வந்திருந்தார். மாராளின் சடலம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் உடனடியாக அடக்கம் செய்வதற்கு தற்காலிக ஏற்பாடு செய்து தரும்படியும், பின்னர் இந்த பகுதி மக்களின் மயானப் பிரச்சனைக்கு உரிய தீர்வு காணலாம் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் கோட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதிகாரிகள் அப்போதும் இதை ஏற்க மறுத்து விட்டனர்.வலுக்கட்டாயம்இரவு சுமார் 1 மணியளவில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வே.பாலகிருஷ்ணன் தலைமையில் அதிவிரைவுப் படையினர் மற்றும் காவலர்கள் அங்கு விரைந்து வந்தனர். மாராளின் உறவினர்கள் அவரது சடலத்தைச் சுமந்து கொண்டு மயானத்திற்குக் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் அதை தடுத்து நிறுத்தி ஆம்புலன்ஸ் வாகனத்தில் மாராளின் சடலத்தை ஏற்றிச் சென்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் வைத்துவிட்டனர்.புதன்கிழமை காலை 6 மணியளவில் அவரது சடலம் திருப்பூர் மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது. மிகுந்த அலைக்கழிப்புக்கு இடையே, மாராளின் சடலம் தாங்காது என்பதால் அவரது உறவினர்களும் வேறு வழியின்றி அதிகாரிகளின் இந்த வலுக்கட்டாயமான முடிவுக்கு ஒப்புக் கொண்டனர்.எனினும் அம்மாபாளையம் தலித் மக்களின் மயானப் பிரச்சனை மட்டும் தற்போது அதிகாரிகளின் பொறுப்பற்ற நடவடிக்கையால் சிக்கலான பிரச்சனையாக மாற்றப்பட்டு நிற்கிறது.

Leave A Reply

%d bloggers like this: