கோவை, பிப். 29-தேசிய பஞ்சாலைக் கழகத்தின்கீழ் இயங்கும் ஏழு பஞ்சாலைகளில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோவையில் மத்திய தொழிலாளர்துறை உதவி ஆணையர் முன்னிலை யில் தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டது. தமிழகத்தில் தேசிய பஞ்சாலைக் கழகத்தின் கீழ் மொத்தம் ஏழு ஆலைகள் இயங்கி வருகின்றன. பங்கஜா, முருகன், சி.எஸ் அண்டுயின்யூ, ஸ்ரீ ரங்கவிலாஸ், கம்போடியா ஆகிய ஐந்து ஆலைகளும் தலா ஓர் பஞ்சாலையும் இயங்கி வருகிறது. இவற்றில் இயங்கிவரும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான கோவை மாவட்ட மில் தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் (என்டிஎல்எப்) தேசிய பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் (ஐஎன்டியுசி ஆகியவற்றின் சார்பில் 22 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்-28 செவ்வாய் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது தேசிய பஞ்சாலைகளை நவீனப்படுத்தி இயக்கிட வேண்டும். ஆலைத் தொழிலாளர் குடியிருப்புகள் முறையாக பராமரித்திட வேண்டும். உற்பத்திப்பிரிவு, உற்பத்தி அல்லாத பிரிவு என்று பேதம் பாராமல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவரும் தினக்ககூலித் தொழிலாளர்களை நிரந்தரம் செய்திட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுக்கு அலுவலக ஒதுக்கீடு, ஆலைப்பணிகளை பிரிவு வாரியாக தனியார் மயப்படுத்தும் போக்கை கண்டித்தும், உணவகம், ஓய்வறை மற்றும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்பாடு, வருடாந்திர ஊதிய உயர்வு, வீட்டு வாடகைப்படி, பஞ்சப்படி உள்ளிட்ட சலுகைகளை முறைப்படி தொழிலாளர்களுக்கு வழங்கக் கோருதல் ஆகிய 22 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது.பேச்சுவார்த்தை:கடந்த செவ்வாய் மற்றும் புதனன்று முழுமையாக வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் பங்கேற்றதால் உற்பத்தி முழுவதுமாக முடங்கியது. இந்நிலையில் கோவை மத்திய தொழிலார் நலத்துறை அலுவலகத்தில் மத்திய உதவிஆணையர் அருண்குமார் முன்னிலையில் புதனன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் என்டிசி நிர்வாகத்தின் சார்பில் மேலாளர் துரைராஜ், உதவி மேலாளர் குணசேகரன் ஆகியோரும் சிஐடியு சார்பில் சி.பத்மநாபன், ஏ.ஜெயராஜ், ஐஎன்டியுசி சார்பில் வி.ஆர்.பாலசுந்தரம், என்டிஎல்எப் சார்பில் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோரிக்கைகள் குறித்து என்டிசி உயர் அதிகாரிகள் பங்கேற்கும் வகையில் மார்ச்- 7ம் தேதி அன்று உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்துவது, அதுவரை போராட்டத்தை ஒத்திவைப்பது என கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டது. இதையடுத்து புதனன்று முதல் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.

Leave A Reply

%d bloggers like this: