திருவனந்தபுரம், பிப்.28-பிப்ரவரி 28 பொது வேலைநிறுத்தத்தையொட்டி கேரளம், மேற்குவங்கம், திரிபுரா உள்பட அனைத்து மாநிலங்களிலும் அனைத்துத்தரப்புத் தொழிலாளர்களும் எழுச்சிமிகு வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். கேரளத்தில் 24 மணிநேர முழு அடைப்பால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்தது. சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. தொழில் நகரமான கொச்சி முற்றிலும் ஸ்தம்பித்து நின்றது. எங்கெங்கு காணினும் பல்லாயிரக்கணக்கில் தொழிலாளர்கள் கொடிகளையேந்தி முழக்கமிட்டவாறு பேரணி நடத்தினர். திருவனந்தபுரத்தில் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் பி.கே.குருதாசன் தலைமையில் மாபெரும் பேரணி நடைபெற்றது.மேற்குவங்கத்தில் கொல்கத்தா உள்பட அனைத்து மாநகரங்களும் வெறிச்சோடிக் கிடந்தன. தொழில் மையங்கள் அனைத்தும் ஸ்தம்பித்தன. போராட்டத்தைச் சீர்குலைக்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டது . ஆனால் தொழிலாளி வர்க்கம் அதற்கு சரியான பதிலடி கொடுத்தது. தேயிலைத் தோட்டங்களில் எந்த வேலையும் நடக்கவில்லை. சணல் ஆலைகள் மூடப்பட்டன. நிலக்கரி சுரங்கங்கள், பொறியியல் நிறுவனங்கள் உள்பட அனைத்துத் துறைகளும் முற்றிலும் ஸ்தம்பித்தன. ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா, ஹரியானா, மஹாராஷ்டிரா, புதுதில்லி உள்பட அனைத்து மாநிலங்களிலும் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், மறியல் என எழுச்சிமிகு போராட்டங்கள் நடைபெற்றன.

Leave A Reply

%d bloggers like this: