மூத்தோர் தடகள சாம்பியன் பட்டத்தை தமிழ்நாடு தக்கவைத்துக் கொண்டது. தமிழ்நாடு அணி ஒட்டுமொத்தமாக 742புள்ளிகளை வென்று மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றது.
பெங்களூர் ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் 33வது தேசிய மூத்தோர் தடகளப் போட்டிகள் நடந்து முடிந்தன. போட்டிகளின் கடைசி நாளன்று தமிழக வீரர்கள் இருவர் புதிய சாதனைகளைப் படைத்தனர். இரு சாதனைகளும் மகளிர் கம்பு ஊன்றித்தாவுதல் போட்டியில் படைக்கப்பட்டன.
40வயதுக்கு மேற்பட்ட மகளிர் கம்பு ஊன்றித் தாவுதல் போட்டியில் இ.ராஜேஸ்வரி 2.6மீ உயரம் தாவி புதிய சாதனை படைத்தார். சென்ற ஆண்டு ரஞ்சு தேவி 1.45மீ தாவி நிறுவிய சாதனையை இவர் முறியடித்தார். சென்னை காவல்துறையில் இன்ஸ்பெக்டராக இருக்கும் 42 வயதான இவர், குண்டு எறிதலில் வெள்ளியும், வட்டு எறிதலில் வெண்கலமும் பெற்றுள்ளார்.
இரண்டாவது சாதனையை டி.ருக்மணி தேவி (55) நிறுவினார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரியான இவர், 55 வயதுக்கு மேலானோர் கம்பு ஊன்றி தாவுதல் போட்டியில், குசும் கோகோயின் முந்தைய சாதனையை முறியடித்தார். சாதனை படைப்பேன் என்று எண்ணவில்லை என இவர் கூறினார்.
கடைசி நாளன்று 5000 மீட்டர் ஓட்டத்தில் பி.வரதன் (70+), சி.செல்வராஜ்(60+) வட்டு எறிதலில் எஸ்.அன்பானந்தம் (65+) கம்பு ஊன்றித் தாவலில் டி.ருக்மணி (55+), கே.பி.சாந்தி(45+), இ.ராஜேஸ்வரி(40+) ஆகியோர் தங்கம் வென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: