பொது வேலைநிறுத்த போராட்டத்தை மகத்தான வெற்றிபெறச் செய்யுமாறு அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களுக்கும் இந்திய தொழிற்சங்க மையம்(சிஐடியு) அறைகூவல் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சிஐடியு அகில இந்தியத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், பொதுச் செயலாளர் தபன்சென் எம்.பி. ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிப்ரவரி 28ம்தேதி நடைபெற உள்ள மாபெரும் வேலைநிறுத்தத்திற்காக நாடு முழுவதிலும் அனைத்து தொழிற்சங்கங்களும் முழுமையான தயாரிப்பை செய்துள்ளன. கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என்று அனைத்து மாநிலங்களிலிருந்தும் தகவல்கள் வந்துள்ளன. அனைத்துத்துறை தொழிலாளர்களும், ஊழியர்களும் முழுமையாக பங்கேற்க இருக்கிறார்கள். பொதுத்துறை ஊழியர்கள், தனியார்துறை ஊழியர்கள், முறைசாரா தொழிலாளர்கள், மத்திய – மாநில அரசு ஊழியர்கள், நிதி நிறுவனங்கள், சாலை போக்குவரத்து, துறைமுகங்கள் என அனைத்து உற்பத்தி மற்றும் சேவை துறைகளிலும் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற உள்ளது.
நாடு முழுவதிலும் அனைத்து துறைகளிலும் நடைபெற உள்ள இந்த வேலைநிறுத்தம், மத்திய அரசின் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு தகுந்த பதிலடியாக அமையும். இந்திய வரலாற்றில் முதன்முறையாக அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் கூட்டாக இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிலையில் சில மாநிலங்களில் வேலைநிறுத்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்த மாநில அரசுகள் மிரட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சர்வீஸ் துண்டிப்பு, எட்டு நாள் சம்பள வெட்டு என்பன போன்ற மிரட்டல்களையும் அச்சுறுத்தல்களையும் விடுத்துள்ளன. எனினும் இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக அனைத்து தரப்பு ஊழியர்களும் முழுமையாக பங்கேற்று, இந்திய தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்று சிறப்புமிக்க இந்தப் போராட்டத்தை முழுவெற்றியடையச் செய்யுமாறு அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் சிஐடியு அறைகூவி அழைக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: