“நூறு குற்றவாளிகள்கூட தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது” என்பதுதான் நீதியின் செய்தி. இதற்கு மாறாக ஒரு சம்பவம் நமது மண்ணில், அதுவும் தலைநகரில் அரங்கேறியுள்ளது. தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை உலகிலிருந்து ஒழிப்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்காது. அதற்காக மனிதனின் பெயரில் இஸ்லாமிய வாசம் தென்பட்டால், உடனே தீவிரவாதியோ என அதிகாரிகளின் அச்சம் அப்பாவிகளை அவமானப்படுத்துகிறது. அதில் கமல்ஹாசன், ஷாருக்கான் மற்றும் நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் கூட தப்பிக்க முடியவில்லை! இந்திய தூதரக அலுவலகத்தில் பணியாற்றும் சீக்கிய அதிகாரியும் பெண்மணியும்கூட இதில் அடங்குவர். ஏன், நமது முன்னாள் ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் இருமுறை ஆடைகள் களைந்து சோதனை செய்யப்பட்டுள்ளார்! இவைகளையெல்லாம் அமெரிக்காதான் பாதுகாப்பு என்ற பெயரில் பாதகம் செய்துள்ளது. இதில் அமெரிக்காவின் மேலாதிக்கம் உறுதிப்படுத்தப்படுகிறது. அப்போதெல்லாம் இந்திய அரசு உடனுக்குடன் அமெரிக்காவின் மீது கடும் கண்டனம் தெரிவிக்காமல், மெல்லிய இறகினால் தடவும் போக்கையே கடைப்பிடித்துள்ளது. நாம் இன்னும் அமெரிக்காவின் அன்பான அடிமையாக இருக்கிறோம் என்பது தெளிவாகிறது. அமெரிக்காதான் அப்படியென்றால், நமது தலைநகர் தில்லியில் முகமது அமீர் என்ற 18 வயது இளைஞன் 1998 பிப்ரவரியில் கொலை, பயங்கரவாதம், சொந்த நாட்டின் மீது போர் தொடுத்தல் என்ற குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டான். 14 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு, கடந்த மாதம் ஜனவரியில் அவனுக்கு வயது 32 ஆகும்போது விடுவிக்கப்பட்டான். அவன் மீது சுமத்தப்பட்ட 20 குண்டுவெடிப்பு வழக்குகளில் 18ல் முற்றிலும் விடுவிக்கப்பட்டான். சாட்சிகளை நீதிமன்றம் விசாரிக்கும்போது, அமீர்தான் ஓடும் ரயிலிலும், பேருந்திலும் குண்டுவைத்தான் என்று யாரும் கூறவில்லை! அமீருக்காக வாதிட்ட வழக்கறிஞர் என்.டி.பாஞ்சோலி கூறுகையில், என்னுடைய 35 வருட வழக்கறிஞர் வாழ்க்கையில் இதுமாதிரி ஒரு வழக்கைப் பார்த்ததில்லை; மிகமிக லேசான ஆதாரத்தை வைத்து 18 வயது வாலிபனை 20 குண்டுவெடிப்பு வழக்கில் இணைத்தது சரியல்ல; போலீஸ் ஒருவரை கைது செய்யும் சட்டத்திலும், உடன் சீர்திருத்தம் தேவை என வலியுறுத்தியுள்ளார்! கணவனுடன் பாகிஸ்தானில் வசிக்கும் தனது சகோதரியை பார்த்து வந்ததுதான் அமீர் செய்த மிகப்பெரிய குற்றம். இந்தியா வந்தவுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அமீர் என்ன கேட்கிறார் என்றால், “நான் ஐந்து பேரை கொன்ற வழக்கில் மூளையாக செயல்பட்டேன் என்று என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் ஹசிம்புரா என்ற ஊரிலும், 2002ம் ஆண்டு குஜராத்திலும் ஆயிரக்கணக்கான மக்களை போலீசாரே சுட்டுக்கொன்றார்களே, இதற்கு இந்த அரசு என்ன சொல்கிறது” என்கிறார். நாம் என்ன கேட்கிறோம் என்றால், 2008ல் பாகிஸ்தான் தீவிரவாதி காசப் மும்பையில், இந்திய மக்களை யந்திரத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வீடியோ காட்சி என்ற முக்கிய சாட்சியிருந்தும், இன்னும் அவனுக்குத் தண்டனை வழங்கப்படவில்லை. தினமும் ரூ.2 லட்சம் பாதுகாப்பு செலவு செய்து கொண்டிருக்கிறது அரசு. ஆனால் வலுவான சாட்சி ஏதுமின்றி 14 வருடம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமீரின் இளமையை நமது இந்திய அரசால் திருப்பித்தர இயலுமா? – ஆதாரம் : தி இந்து (7.2.2012)

Leave A Reply

%d bloggers like this: