அன்றாடம் செத்துப் பிழைக்கும் அருமைமிகும் உழவர்காள்! இளைஞர்காள் வணிகர்காள் உழைப்பாளித் தமிழர்காள்! மண்ணுலகில் நூற்றிலொரு சின்னப்பங்காய் மட்டுமுள்ள முதலாளி வர்க்கமது முழுச்சொகுசாய் வாழ்வதுவும் தொண்ணூற் றொன்பதாயுள்ள தொழிலாளிவர்க்கமது தொன்று தொட்டே இச் சுரண்டும் வர்க்கமதன் ஆளுமையால் துன்பமுற்று வாடுவதும் தலைஎழுத்தோ விதியோ அல்ல என்பதை இம்மாநாட்டில் நன்கறிந்து கொள்ள வாரீர்! வறுமை இருள் போதா தென மின்சாரவெட்டிருளும் விவசாயப் பணித்தடையும் தொழில் முடக்கப் பிணித்துயரும் அரசாள வந்தோரின் அலட்சியத்தால் அதிகரித்தே அவலத்தில் தமிழ்மக்கள் அலை மோதும் விதமாக பொருள்களுக்கு விலைஏற்றிப் பால்விலையை மேலேற்றிப் பேருந்துக்கட்டணத்தை மின்கட்டணத்தையு மேற்றி அரியணையில் அமர்ந்திட்டால் சுருட்டுவதே பணியென்று எண்ணுவோரை எச்சரிக்க ஏகிடுக நாகைநகர்! தனியாரின் மயத்துடனே தாராளமயம் நாட்டத் துணிந்ததுடன் உலகமயத் தப்புத்தாளங்களிட்டே அனுதினமும் ‘ஆபத்தான ஆயுதங்கள் உள்ள தேசம்’ எனப்புளுகி ஈராக்கை அழித்திட்டயுத்த வெறி- தணியாமல் ஈரானைத் தற்போதும் பொய் கூறித் தாக்குதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தார் தினவெடுத்தே எண்ணை வள நாடுகளைக்கைப்பற்றும் திட்டம் அம்பலமாகும் தெளிவுரைகள் கேட்டிடுக! சாதி மத வர்க்க இன பேதங்களால் மனிதகுலம் சீரழியும் நிலை ஆய்ந்து சரியான தீர் வினையும் போதித்த மார்க்சீய மேதைகளின் இடது சாரிப் பாதைக்குத் தமிழகமும் பாரதமும் வந்திடவும் ஆதிக்க பீடங்கள் அத்தனையும் அசைந்தாடி அச்சத்தில் அலறிடவும் உளறிடவும் வீழ்ந்திடவும் சோதனைகளினைத்தாங்கிச் சோர்வின்றி மாநாட்டுச் செம்படையின் பேரணியில் செங்கீதம் பாடவாரீர்! – கவிஞர் சோலை கண்ணன்

Leave A Reply

%d bloggers like this: