புதுதில்லி, பிப். 23 – புதுதில்லி மேஜர் தயான் சந்த் தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற ஹாக்கி ஒலிம்பிக் தகுதி போட்டியில் இந்தியா, கனடாவை 3-2 என்ற கோல்களில் வென்றது. இதுவரை நடைபெற்ற நான்கு சுழல் போட்டிகளையும் வென்றுள்ள இந்தியா இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது. இதுவரை எளிதாக வென்று வந்த இந்தியாவுக்கு கனடா நெருக்கடியான போட்டியைக் கொடுத்தது. போட்டி மிகவும் பரபரப்பாக இருந்தது. சந்தீப் சிங் அடித்த இரண்டு பெனால்டி கார்னர் கோல்களின் உதவியால் இந்தியா வென்றது. இந்தியாவின் தற்காப்பு கடுமையாகச் சோதிக்கப்பட்டது. முதல் பாதியின் முடிவில் இந்தியா 1-0 என முன்னிலையில் இருந்தது. இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் சந்தீப் அதை 2-0 என ஆக்கினார். அடுத்த மூன்று நிமிடங்களில் கனடாவின் மார்க் பியர்சனும் ஸ்காட் டப்பரும் அதை 2-2 என மாற்றினர். 61வது நிமிடத்தில் சந்தீப் அடித்த பெனால்டிகார்னர் கோல் வெற்றிகோலாக மாறியது. ஆட்டம் தொடங்கிய 26ம் நிமிடத்தில் எஸ்.கே.உத்தப்பா குறுக்காகக் கொடுத்த பந்து கனடா வீரரின் மட்டையில் பட்டு எகிறி சிவேந்திரா முன் விழுந்தது. அதை அவர் கோலுக்குள் சுண்டிவிட்டார் இந்தியா 1-0. இரண்டாம் பாதியின் 5ம் நிமிடத்தில் சந்தீப் அடித்த பெனால்டிகார்னர் தடுப்பாரின்றி கோலில் விழுந்தது. 50ம் நிமிடத்தில் பியர்சன் ஒரு கோல் அடித்தார். 53ம் நிமிடத்தில் டப்பர் ஒரு பெனால்டி கார்னர் கோல் அடித்தார். ஸ்கோர் 2-2. இரு அணிகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தின. இரு அணிகளும் சளைக்காமல் போராடின. கனடாவீரர் ரிச்சர்ட் ஹில்ட்ரெத் வெளியேற்றப்பட்டார். 61ம் நிமிடத்தில் சந்தீப் பெனால்டிகார்னரில் கோல் அடித்தார். இந்தியா 3-2. ஆயினும் கனடா ஆவேசமாக தாக்குதல் தொடுத்தது. இந்திய தற்காப்பு தாக்குப்பிடித்த தால் இந்தியா வென்றது. மற்ற போட்டிகளில் சிங்கப்பூரை போலந்தும், இத்தாலியை பிரான்சும் வென்றன.

Leave a Reply

You must be logged in to post a comment.