கங்கையும் யமுனையும் சரஸ்வதியும் சங்கமமாகும் நகரம்- அலகாபாத்… அது, நதிகளின் சங்கமம்… இந்துவும் இஸ்லாமும் கிறிஸ்தவமும் சங்கமமாகும் பூமி நாகை… இது மதங்களின் சங்கமம்- மானுடத்தின் சங்கமம்… சந்தனத் தமிழெடுத்து- சுந்தரரும் அப்பரும் திருஞான சம்பந்தரும் தேவாரப் பதிகங்களால் நாவாரப் பாடிப்போற்றிய பாடல் பெற்ற திருத்தலங்கள் நிறைந்த பூமி… நாகை நீலயதாட்சியம்மன், சிக்கல் சிங்காரவேலர் கோயில்களும், நாகூர் தர்காவும், வேளாங்கண்ணி மாதா ஆலயமும் மானுட ஒற்றுமைக்கு – இந்த மண்ணில் மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றன… நாதஸ்வர ஓசைகளும்- நாட்டியங்களும் – நாதமேளங்களும்- நாட்டுப்புறக்கலைகளும் இந்த மண்ணில் மலர்ந்து வளர்ந்திருக்கின்றன. கி.பி. 17ம் நூற்றாண்டு வரை பௌத்தமதம் நாகையில் செழித்து வளர்ந்துள்ளது. புத்தரின் பொற்சிலைகளும், புத்த விகாரைகளும் களவாடப்பட்டு சிதைக்கப்பட்ட வரலாறுகள் இங்கே நிறைய உண்டு. “வாழியவன் தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி! ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாதொழுகல் உயிரோம்பும் ஆழியாள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி!” என்று சிலப்பதிகாரக் ‘கானல் வரிகள்’ பாடியதும், சிலம்புக்காப்பிய நாயகர்கள் கண்ணகி, மாதவி, கோவலன் வாழ்ந்ததும், கரிகாற்சோழன் ஆட்சிபுரிந்த தலைநகரமாகவும் திகழ்ந்தது பூம்புகார்… கவிச்சக்ரவர்த்தி கம்பனும், கவிகாளமேகமும் மனிதநேய மாமுனிவர் குன்றக்குடி அடிகளாரும் முற்போக்கு நாடக கலைஞர் கோமல் சுவாமிநாதனும் பிறந்தது நாகை மாவட்டத்தில்… மறைமலை அடிகளார் தோன்றி தனித்தமிழ் வளர்த்த நகரம் நாகை. “பொன்னியின் செல்வன்” பேராசிரியர் கல்கி, “நந்தனார் சரித்திரம்” பாடிய கோபாலகிருஷ்ணபாரதி, பெரிய புராணம் தந்த சேக்கிழார், உவமைக் கவிஞர் சுரதா, கவி.கா.மு.செரீப், கம்பன் கழகம் வளர்த்த நீதிபதி மு.மு.இஸ்மாயில், இசைமாமணி சீர்காழி கோவிந்தராஜன், கலைஞர் மு.கருணாநிதி, மாபெரும் எழுத்தாளர்கள் சாண்டில்யன், ஜெகசிற்பியன், மௌனி இன்னும்பல சான்றோர் தோன்றினர். தமிழுக்கு முதல் நாவல் தந்த மாயூரம் வேதநாயகம் பிள்ளை. சிறப்புச் சேர்த்தது நாகை மாவட்டம். குடகில் பிறந்து தவழ்ந்து வந்து தஞ்சை தரணியை வளமாக்கும் காவிரி போல், கருநாடகாவில் பிறந்த மாமனிதர் பி.சீனிவாசராவ், கீழத்தஞ்சைக்கு வந்து சேரிக்குடிசைகளில் செங்கொடிகள் ஏற்றினார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடி- அவர்களைப் போராடச் செய்து விடுதலை மூச்சை சுவாசிக்க வைத்தார். அணையாத தீபச்சுடர்களாய் எங்கள் வெண்மணி தியாகிகள்… அவர்கள் தீயில் வெந்தது வெறும் கூலிப்போராட்டத்திற்காகவா? சாதியக் கொடுமைகளுக்காக மட்டுமா? “எத்தனை குண்டுகள் எமைத்துளைத்தாலும் எங்களின் வர்க்க கீதம் ஓயாது… எத்தனை நெருப்புகள் எமைச்சூழ்ந்தாலும் எங்கள் மார்க்சியப் பாதை மாறாது” என்று அவர்கள் உயர்த்திய செங்கொடியை இறக்க மறுத்ததால்தான் ஆணவக் கொடியவரின் நெருப்பு அவர்களை தியாகச் சாம்பலாக்கியது. அந்த வெண்மணி தியாகிகள் நினைவாலயம் இந்த மண்ணில் தான்… திருமெய்ஞானம் அஞ்சான், நாகூரான், சிக்கல் பக்கிரிசாமி- இன்னும் பல தியாகிகளும் ரத்தம் சிந்தி பலியானது இந்த மண்ணில் தான்… மாதர் குலத் திலகங்கள் மணலூர் மணியம்மா, தில்லையாடி வள்ளியம்மை, மூவாளூர் ராமாமிர்தம் அம்மாள் புகழ்பாடும் பூமி இது. மூதறிஞர் ராஜாஜியுடன் சர்தார் வேதரெத்தினம் உப்புச்சத்தியாக்கிரகம் செய்த வேதாரண்யம், தாயுமான சுவாமிகள் பிறந்த நகரமும் அதுதான். உறங்காத கடல் அலைகள் ஜலதரங்கம் இசைக்கும் தரங்கம்பாடி – அதன் சரித்திரக்கோட்டை… இங்குதான் முதன்முதலில் அச்சகம் உருவாகி, தமிழில் முதல் பைபிள் வெளியானது. இந்தியாவிலேயே முதன்முதலாய் காகித ஆலை தோன்றியது 1710-ல் அது பொறையாறில்… முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்ட நகராட்சிகளுள் நாகப்பட்டினம் நகராட்சியும்ஒன்று. தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 1885. திருச்சியில் இப்போது புகழ்பெற்று விளங்கும் செயிண்ட் ஜோசப் கல்லூரி, முதன்முதலில்நாகையில்தான் ஆரம்பிக்கப்பட்டது. அது பின்னர் திருச்சிக்கு மாற்றப்பட்டது. சிறப்புமிக்க துறைமுகப் பட்டினமாய்த் திகழ்ந்தது நாகப்பட்டினம். புகழ்பெற்ற சித்தர் கோரக்கச் சித்தர் ஆலயம் உள்ள ஊர் வடக்குப்பொய்கை நல்லூர். சுற்றுலாவுக்குக் கோடியக்கரை சரணாலயம் மற்றும் வைத்தீஸ்வரன் கோயில், திருக்கடையூர் போன்ற வழிபாட்டுத்தலங்கள் நிறைந்த மாவட்டம். புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் கே.சுப்பிரமணியம், அவரது மகள் நாட்டியக்கலைஞர் பத்மா சுப்பிரமணியமும் பிறந்த ஊர் நாகைக்கு அருகிலுள்ள பெருங்கடம்பனூர். இன்னும் வைதீஸ்வரன் கோவில், சிக்கல் போன்ற பகுதிகளில் மாபெரும் நாதஸ்வர வித்வான்களும் இசைக்கலைஞர்களும், சீர்காழி தமிழிசை மூவரும், அருங்கலைகளும், மாபெரும் வரலாறு படைத்த மண் இது… கொள்ளிடக் கரையிலிருந்து கோடியக்கரை வரை நீண்டு கிடக்கின்ற வங்கக் கடலோர மாவட்டமான இங்கு, ஐம்பெரும் திணைகளுள், மருதமும் நெய்தலும் பிணைந்து கிடக்கும் மாவட்டம். ஒருபுறம் மீனவ மக்களும், மறுபுறம் விவசாயி மக்களும் இடையில் பல்வேறு தொழில்கள் புரியும் மக்களும் வாழும் மாவட்டம் இது. புயலுக்கும் சுனாமிக்கும் வெள்ளத்திற்கும் வறட்சிக்கும் பேர் பெற்ற மாவட்டம் நாகை. இந்த மண்ணில் செங்கொடி இயக்கத்திற்காகப் போராடி, நலிந்த தாழ்த்தப்பட்ட மக்களை உயர்த்தி, மகத்தான வரலாறாய் நிற்கும் இயக்கத்தின் மாபெரும் தலைவர்களும், வாழும் தலைவர்களும் சேவையால் தியாகத்தால் வீரமும் செவ்வியக்கமும் மணக்கும் பூமி இது….

Leave a Reply

You must be logged in to post a comment.