விடுதலைப் போராட்டக் காலம் துவங்கி இன்றும் விடுதலை காக்கப் போராடும் செங்கொடி இயக்கத்தின் வாரிசுகள் நாகையில் கூடுகிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதி மக்களின் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து, புதிய திசைவழி காட்டுவதாக நாகை மாநாடு அமையும்கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பொறுத்தவரை மாநாடுகள் என்பது அனுபவங்களை உள்வாங்கி, படிப்பினைகள் பெற்று, புதிய பாதைக்கு தடம் அமைப்பதே ஆகும். மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19 வது மாநில மாநாட்டை தொடர்ந்து 20 வது மாநில மாநாடு நாகையில் நடைபெறவுள்ளது. இரண்டு மாநாடுகளுக்கும் இடையிலான 4 ஆண்டுகளில் நடத்திய போராட்டங்கள், இயக்கங்கள், பெற்ற வெற்றிகள், அனுபவங்கள் ஏராளம். முதலாளித்துவ கட்சிகள் அனைத்தும் மக்களது வாழ்வை நாசமாக்கும் நவீன, தாராளமயமாக்கல் கொள்கைகளையே தடம்பிறழாமல் பின்பற்றி வரு கின்றன. மத்தியில் தற்போதுள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசானாலும், முந்தைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியானாலும் பின்பற்றும் பொருளாதாரக் கொள்கை ஒன்றே. அயல்துறை கொள்கையைப் பொறுத்தவரை, அமெரிக்காவுக்கு காவடி தூக்கும் கொள்கைகளை பின்பற்றுவதில் இந்த இருகட்சிகளிடையே வேறுபாடு இல்லை. தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பின்பற்றும் பொருளாதாரக் கொள்கைகள் ஒன்றே. மத்திய அரசு பின்பற்றும் அதே மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளைத்தான் தமிழகத்தில் இவர்கள் நகல் எடுத்து பின்பற்றுகிறார்கள். முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ கொள்கைகளுக்கு மாற்றுக் கொள்கையில் இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே முன் வைக்க முடியும். தமிழகத்தில் மாற்றுக் கொள்கைகளை முன் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வந்துள்ளது. சமூகத் தளத்திலும், பண்பாட்டுத் தளத்திலும் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. விவசாயத்தை நாசம் செய்யக்கூடிய, தொழிற்துறையை சீரழிக்கக்கூடிய கொள்கைகளை எதிர்த்து மக்களைத்திரட்டி வீறுகொண்டு போராடி வருகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. விலைவாசி உயர்வுக்கு காரணமான, வேலையின்மையை பெருக்கக்கூடிய, கிராம மக்களை அத்தக்கூலிகளாக நகரங்களை நோக்கி விரட்டக்கூடிய, கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளைக் கூட தனியாருக்கு தாரைவார்க்கிற நவீன தாராளமயமாக்கல் கொள்கைக்கு மாற்றான கொள்கைகளை முன்வைத்து மக்களை அணிதிரட்ட வேண்டிய பெரும்தேவை அகில இந்திய அளவிலும், தமிழக அளவிலும் தேவைப்படுகிறது. அரசியல் கட்சிகளின் மாற்றாக மட்டும் இது அமைய முடியாது. அடிப்படையான கொள்கை மாற்றத்தின் அடிப்படையில் போராட வேண்டியுள்ளது. இதற்கான போராட்டத்தை வலுப்படுத்திட, இந்தப் பாதையில் இடதுசாரி ஜனநாயக முற்போக்கு சக்திகளை அணி திரட்டிட நாகையில் நடைபெற உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு வியூகம் வகுக்க உள்ளது. கடந்த நான்காண்டு காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் வர்க்க வெகுஜன அமைப்புகள் நடத்திய போராட்டங்கள் எண்ணற்றவை. பட்டா மற்றும் குடிமனைக்காக மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி போராடியது நமது கட்சி. சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக நிலம் சுருட்டப்பட்டதை எதிர்த்தும் ஏழை, எளிய விவசாயிகளின் நிலங்கள் ஏமாற்றிப் பறிக்கப்பட்டதை எதிர்த்தும் எண்ணற்ற இயக்கங்களை நடத்தியுள்ளோம். விவசாயத் தொழிலாளர் மற்றும் முறைசாரா தொழிலாளர்களின் நலவாரியங்களை பாதுகாக்க கண்ட களங்கள் கணக்கிலடங்கா. தமிழகத்தின் நீராதாரத்தைப் பாதுகாக்க, தாமிரபரணி உள்ளிட்ட நதிகளைப் பாதுகாக்க மணல்கொள்ளையைத் தடுக்க, நீதிமன்றத்தில் வழியாகவும் மக்கள் மன்றத்தின் போராட்டத்தின் மூலமாகவும் அயராது பாடுபட்டு வந்துள்ளோம். வாச்சாத்தியில் வனத்துறை-காவல்துறை-வருவாய்த்துறையைச் சேர்ந்தவர்கள் சிலர் இணைந்து நடத்திய அக்கிரமத்தை எதிர்த்து சலிப்பின்றி போராடி, அந்த மக்களுக்கு நீதிமன்றத்தின் மூலம் நீதியும் நிவாரணமும் கிடைக்க வைத்த நிம்மதியோடு நாகையில் கூடுகிறோம். நாகரிக சமூகத்தின் அவமானச் சின்னமாக உத்தப்புரத்தில் இருந்த தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதியை தகர்த்து, தொடர்ந்து அந்த மக்களுக்கு முழு நீதி கிடைத்திட போராடும் தீரர்கள் கூடுகிறோம். தீண்டா மைச் சுவர்களை கண்டறிந்து அவற்றை உடைத்தெறிந்த சமூக நீதிப் போராளிகளின் சங்கமமாக நாகை மாநாடு அமைய உள்ளது. கம்யூனிஸ்ட் இயக்கமும், அம்பேத்காரும் பெரியாரும் காட்டிய வழியில் ஆலய நுழைவுப் போராட்டங்களை நடத்தி, சமூக இழிவுகளைத் துடைத்திட போராடும் படை வரிசை நாகையில் திரள உள்ளது. ஆலைத் தொழிலாளர்கள் முதல் முறைசாரா தொழிலாளர் வரை அனைத்துப் பகுதி தொழிலாளர்களுக்காகவும் போராடும் வர்க்கப்போர்ப்படை கீழத்தஞ்சையில் கூடுகிறது. பெண்கள், சிறுபான்மையோர், மாற்றுத்திறனாளிகள் என சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் தமிழகத்தின் நெற்களஞ்சியத்தில் சங்கமிக்கிறோம். தோழர் பி.சீனிவாசராவ் வழியில் விவசாயத் தொழிலாளர்களுக்காக இன்றளவும் அயராது போராடும் தோழர்கள், அடுத்தக்கட்ட இயக்கம் குறித்து விவாதிக்க கூடுகிறோம். இலங்கைத் தமிழ் மக்கள் இன்னல் துடைத்திட தமிழ்நாட்டில் மட்டுமின்றி தலைநகர் தில்லி வரை சென்று குரல்கொடுத்த இயக்கத்தின் போராளிகள் நாகையில் கூடுகிறோம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடாவடிகளை எதிர்த்தும், மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், மாவட்ட அளவிலும், வட்ட அளவிலும், உள்ளூர் அளவிலும் போராட்டங்களை நடத்தி வருகிற முன்னணிப் போர்ப்படை, தனது அனுபவங்களை பரிசீலித்து அடுத்தக்கட்ட போர்க்களத்திற்கு தயாராகும் நிகழ்வே நாகையில் நடைபெற உள்ள நமது மாநில மாநாடாகும். விடுதலைப் போராட்டக் காலம் துவங்கி இன்று விடுதலையைப் பாதுகாக்க போராடும் செங்கொடி இயக்கத்தின் வாரிசுகள் நாகையில் கூடுகிறோம். மதச்சார்பின்மை, மக்கள் நல்லிணக்கத்தை உயர்த்திப் பிடிக்கவும், கூட்டாட்சி, ஜனநாயகப் பரவலை வலியுறுத்தவும் மாநாடு கூடுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதி மக்களின் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து, புதிய திசைவழி காட்டுவதாக நாகை மாநாடு அமையும் என்பது திண்ணம்.

Leave a Reply

You must be logged in to post a comment.