தருமபுரி மாவட்ட நீதிமன்ற வளாகம், மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வாச்சாத்தி வழக்கில் 2011 செப்டம்பர் 29அன்று தீர்ப்பு சொல்லப்பட இருந்ததே இதற்குக் காரணம். பொதுமக்கள், காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் இவர்களுடன் வாச்சாத்தி கிராமமே அங்கு திரண்டு வந்திருந்தது. பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களின் நேரடி ஒளிபரப்புக்கான வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. மாவட்ட நீதிபதி திரு. எஸ்.குமரகுரு அவர்கள் தீர்ப்பை வாசித்தார். வாச்சாத்தி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 269 பேருமே குற்றவாளிகள் என்றும், இறந்துபோன 54 பேர் தவிர உயிரோடுள்ள 215 பேருக்கும் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். நான்கு ஐஎப்எஸ் அதிகாரிகள் உட்பட வனத்துறையைச் சேர்ந்த 126 பேர், காவல்துறையைச் சார்ந்த 84 பேர், வருவாய்த் துறையைச் சேர்ந்த 5 பேர் தண்டனை பெற்றவர்களாவர். வாச்சாத்தி – தருமபுரி மாவட்டம் சித்தேரி மலை அடிவாரத்தில் உள்ள சின்னஞ்சிறிய கிராமம். 1992 ஜூன் மாதம் 20ந் தேதி வாச்சாத்தி மக்களைப் பொறுத்தவரை வாழ்வின் இருண்டநாள். வாழ்நாளில் இதுவரை கேள்விப்பட்டிராத, சந்திக்காத அத்தனைக் கொடுமைகளையும் அந்த ஒரே நாளில் அம்மக்கள் அனுபவித்தனர். அரசின் அடக்குமுறைக் கருவியான வனத்துறை, வருவாய்த்துறை, காவல்துறையைச் சார்ந்த ஏறத்தாழ 300பேர், துப்பாக்கி, தடி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வாச்சாத்தி கிராமத்தின் மீது ஒருசேர படையெடுத்தனர். கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான ஆண்கள் ஓடிவிட, அப்பாவிப் பெண்களும், முதியவர்களும், நம்மை ஏன் பிடிக்கப் போகிறார்கள் என நினைத்தவர்களும் இப்படையினரால் சின்னாபின்னப்படுத்தப்பட்டனர். அப்போது ஆட்சிப் பொறுப்பிலே இருந்த அதிமுக அரசு, நடந்த அனைத்தையும் மூடி மறைத்தது. குற்றவாளிகளைப் பாதுகாக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவும் செயல்பட்டது. நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை ஏற்க மறுத்தது. நடந்த கொடுமைகள் அனைத்தையும் அம்பலப்படுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக கண்டனக் கணைகளையும் அன்றைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஏ.நல்லசிவன் அவர்களை இழிசொற்களாலும் ஏசியது. அன்றைக்கு ஆட்சிப் பொறுப்பிலிருந்த அதிமுக அரசு குற்றச்சாட்டுகள் அனைத்தையும் உயர்நீதிமன்றத்திலும் மறுத்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், திருமதி பாமதி ஐஏஎஸ் அவர்களை ஒரு நபர் விசாரணை அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டது. 11.12.92 அன்று அவர் விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 24.2.95ல் மத்திய புலனாய்வுத்துறை விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அதிமுக அரசு முழுபெஞ்ச்க்கு மேல்முறையீடு செய்தது. ஆனால் முழு பெஞ்ச், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை உறுதிப்படுத்தியது. இதை எதிர்த்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்றம் தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்தது. 23.4.96ல் தனது விசாரணை அறிக்கையை சிபிஐ உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. பிறகு கோவை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது. வாச்சாத்தி வழக்கில் அதிமுக வழியில் திமுக 1996 மே மாதம் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், குற்றவாளிகள் அனைவரையும் சிபிஐ கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தது. இதற்கு எதிராக, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் குற்றவாளிகளின் மனைவிமார்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக சட்ட விரோதமாக, சிறையிலிருந்தவர்களை விடுதலை செய்தார் கலைஞர் கருணாநிதி. சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 6 பிரிவுகளுக்கு வழங்க வேண்டிய இடைக்கால நஷ்ட ஈடு தொகையாக 2,54,06,250 ரூபாய் கோரியிருந்தோம். நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு 1,24,00,600 ரூபாய் மக்களுக்கு பெற்றுத் தரப்பட்டுள்ளது. ஆமையாய்ப் பதுங்கியும், ஊமையாய் ஒடுங்கியும் கிடந்த அந்த மக்கள் எப்படி இவ்வளவு பெரும் போராளிகளாக மாறினர்; அவர்களை மாற்றியது எது? இதே கேள்வியை தீர்ப்பு வெளிவந்த பிறகு வாச்சாத்தி கிராமத்திற்கு சென்ற ‘பிரண்ட் லைன்’ என்ற ஆங்கில பத்திரிகையின் சிறப்பு நிருபர் துரைராஜ் அவர்கள் அம்மக்களிடம் கேட்டு பதிலையும் பதிவு செய்துள்ளார். ஆளுங்கட்சியையும், பெரும் எண்ணிக்கையிலான அரசாங்க அதிகாரிகளையும் எதிர்த்து இவ்வளவு காலம் போராடுவதற்கு உங்களுக்கு எப்படி தைரியம் வந்தது? பரந்தாயி என்ற பெண் பதில் சொல்லியிருக்கிறார், “இதோ இந்த செங்கொடி தான், இந்த செங்கொடி தான்”. போராட்டத்திற்கான உந்துவிசையாக உற்ற துணையாக யார் இருந்தார்கள் என்பதை ‘செங்கொடி’ என்ற ஒற்றைச் சொல்லில் எல்லாவற்றையும் வெளிப்படுத்திவிட்டார் என்றே கருதுகிறேன். ஆம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும் இதில் தலையிடாமல் போயிருந்தால் “பொய்யாய், பழங்கதையாய், கனவாய் மெல்லப் போனதுவே” என்று பட்டினத்தார் பாடிய கதையாக வாச்சாத்தி கொடுமையும் காலப்போக்கில் மறைந்துபோயிருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஒரு சின்னஞ்சிறு கிராமத்தின் பிரச்சனையை இருபது ஆண்டுகாலம் இடைவிடாது தூக்கிச் சுமப்பது, அதிலும் ஆளுங்கட்சிகளின் ஆதரவோடு இருக்கிற அதிகார வர்க்கத்திற்கு எதிராகப் போராடி, வாதாடி, குற்றவாளிகளுக்கு தண்டனையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தையும் பெற்றுத் தந்திருப்பது பெரும் வரலாற்றுச் சாதனை என்பதை நடுநிலையாளர்கள், நியாய உள்ளம் படைத்தவர்கள் மனதாரப் பாராட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.