ஆளும் வர்க்கங்கள் நடுநடுங்கட்டும்! அமெரிக்க – ஏகாதிபத்தியங்கள் நடுநடுங்கட்டும்! பன்னாட்டுக் கொள்ளையர்கள் பதறி ஓடட்டும்! ஊழல் பேர்வழிகள் சிறைஉள்ளே போகட்டும்! ஊழல் சொத்துக்கள் பறிமுதலாகட்டும்! உழைக்கும் கரங்கள் ஓங்கி உயரட்டும்! கோடி கோடியாய் குரல்கள் முழங்கட்டும்! கோமான்களின் மாளிகைகள் பொடிபடட்டும்! பரம்பரைக் கொள்ளையர் – குடும்பக் கொள்ளையர் பாழ்படுத்தி நாட்டையும் மக்களையும் வதைப்பதைத் தடுத்து நிறுத்தியே தீருவோம்! மதவெறியர், சாதிவெறியரை மக்கள் மனதிலிருந்து அடியோடு முடிசாயத் துடைத்தெறிவோம்! ஊழல்பேர்வழிகள் அதிகாரத்தை நிலைநிறுத்த மக்களை ஊழல் சேற்றில் மூழ்கடிக்க முயற்சிக்கிறார்கள்! கொள்ளையடித்த பணக் குவியல்களிலிருந்து கொட்டுகிறார் தேர்தல்களில் வெற்றிபெற! ஐந்தாண்டு ஆளுகையில் அடிப்பதோ கொள்ளை பின்பு அவர்களுக்கு ஐந்தாண்டு ஓய்வு இவர்கள் வந்து ஐந்தாண்டு கொள்ளை பின்பு இவர்களுக்கு ஓய்வு – மீண்டும் அவர்கள்? எத்தனை காலம் இதே அரசியல் கூத்தை இந்தத் தமிழகம் பொறுமை காத்திடும்? எழுந்திடு விரைவாய் மாற்றுப்பாதையில்! இன்றே வந்திடு இடது பாதையில். இடதைத் தவிர எவர் வந்தாலும் இங்கு இருண்ட தமிழகம் ஒளிபெறாது! ஓய்வறியாப் போராளிகள் ஒடுக்கப்பட்டோர் வாரிசுகள் உழைப்பாளர் போராட்டத்தின் உன்னதத் தளபதிகள் பிப்.25-ல் ஒன்றாய் கூடுகிறார் நாகையில்! வங்கக் கடல் பொங்கி சுனாமியாய் மக்கள் அழிந்த கதை மறக்காது! மனிதச் செங்கடல் பொங்கி எழுவதை மாநிலத்தோர் கண்டு மலைக்கட்டும்! இடிமுழங்கும் புயலை எட்டிப் பிடிப்போம்! எமது படை வலிமையிது என்று காட்டுவோம்! அணி அணியாய் நாகை நோக்கி அணிவகுப்போம் நாகை நோக்கி! – எஸ்.ஏ.பி.

Leave A Reply

%d bloggers like this: