அண்மையில் பத்மஸ்ரீ விருது பெற்ற கூத்துப்பட்டறை முத்து சாமி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்வதற்காக தமு எகச நிர்வாகிகள் அவரது சென்னை கோயம்பேடு அய்யப்பா நகர் வீட்டிற்கு சென்றிருந்தோம்.வீட்டினுள் இல்லை; அலுவலகத்தில் இல்லை.மொட்டைமாடியில் இருந்த சிறு நாடக ஸ்டுடியோவில் பிருஹன்மலை நாடகத்திற்கான பயிற்சியில் இருந்தார். எங்களைப் பார்த்ததும் பருமனான மீசை மேலேற சிரித்து வரவேற்றார். பிரளயன், என்ன பயிற்சி என கேட்டதற்கு, மகாபாரத விராடபருவத்தில் அர்ச்சுணன் மூன்றாம் பாலினராக மாறுவதை ஒட்டிய பிருஹன்மலை நாடகம் என்றார்.அப்படியே சந்திப்பு சிறு உரையாடலாக மாறியது. கலைஞர்கள் விலகி அவர்களுக்கான பயிற்சியில் கவனம் காட்டத் துவங்கினர். நாங்கள் எங்கள் கலை ஞர்களுக்கு மாதச் சம்பளம் கொடுக்கிறோம். உணவு, தங்குமிடம் கொடுக்கிறோம் என்ற முத்துசாமி, இந்த அணுகுமுறை எங்கள் ட்ரஸ்ட் குழுவில் கேள்வியை எழுப்பியுள்ளது என்றார். பயிற்சியை கொடுத்து விட்டு,நாம் சம்பளமும் தர வேண்டுமா என கேள்வி வருகிறது என்றவர், இதை எல்லாம் சமன் செய்து கொண்டு எழுபத்தைந்து வயதிலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறேன் என்றார் மீசையை நீவி விட்டபடி. எனது ஊர் நாகை மாவட்டம் செம்பொனார்கோவில் அருகே உள்ள புஞ்சை கிராமம்; நான் நேரடியாக நடிப்பதை விட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்ற முத்துசாமி, கூத்துப்பட்டறையில் நாடகப் பனுவல் எழுத கற்றுக் கொடுக்கிறோம்; நடிப்பு,அரங்க நிர்வாகம்,கூத்து, பாரம்பரிய இசைக்கருவிகளை மீட்ட கற்றுக் கொடுப்பது; வீரவிளையாட்டு பயிற்சிகள் என போகிறது என்றார். கூத்துப்பட்டறையில் பயின்ற பலரும் சினிமாவிற்கு போகின் றனர். நண்பன் படத்தில் ஜீவாவிற்கு அக்காவாக இங்கு பயின்ற தேவி நடித்துள்ளார் என்றவர், நம்மை மாதிரியான நிகழ்த்து கலைக்கு அரங்குகள் கிடைக்காத,இடவசதி இல்லாத சூழலில் இந்த மொட்டைமாடியையே அதற்கான அரங்காக மாற்றி பயிற்சி நடந்து கொண்டிருக்கிறது என்றார். இந்த விருதைப் பெறும் முதல் தமிழ் நாடகக்காரர் நீங்கள் தானா என்ற கேள்விக்கு, இல்லை முதலாவதாக நாடக எழுத்திற் காக இந்திரா பார்த்தசாரதி பெற்றிருக்கிறார். நான் நாடக அரங்கு செயல்பாட்டிற்காக இரண்டாவதாக இந்த விருதைப் பெற்றிருக் கிறேன் என்றார். 1969 ல் நிகழ்த்தப்பட்ட இவரின் காலம் கால மாக நாடகம் நவீன நாடகச் செயல்பாட்டிற்காக ஊன்றபட்ட முதல் விதை. தமிழின் குறிப்பிடத் தக்க பல கதைகளை, கவிதைகளை எழுதி ஓர் எழுத்தாளராக அடையாளம் காணப்பட்ட ந.முத்துசாமி கசட தபற, நடைபோன்ற இதழ்களில் பங்கு பெற்ற படைப்பாளி. இவரின் கதைகள் கொண்ட நீர்மை தொகுப்பு உள்ளிட்டு, கட்டுரை, நாட கம் என ஏழு தொகுப்புகள் வெளிவந்துள்ளன. 75 லிருந்து ஆரம் பிக்கப்பட்ட கூத்துப்பட்டறை இதுவரை அறுபது நாடகங்களை அரங்கேற்றியுள்ளது. இதில் இங்கிலாந்து,காந்தியின் கடைசிச் சொற்கள், மெக்பத், படுகளம், வாய்ஸ்செக், பாஞ்சாலி சபதம், தெனாலிராமன், நாற்காலிக்காரர்கள் முக்கியமானவை. பாரம்பரிய கூத்து மட்டுமின்றி,மேற்கத்திய நாடகப் பனுவல்களை தமிழாக்கி, மேடை ஏற்றிய ஒரு பண்பாட்டு இணைப்புப் பாலமாகவும் முத்து சாமி செயல்பட்டு வருகிறார்.

Leave A Reply

%d bloggers like this: