நினைவுக் களஞ்சியத்திலிருந்து நம் கருத்தை சொல்வதோடு நகரும் வாழ்க்கையி டையே பிறர் கவிதைகள் பற்றிக் கருத்து கூறி தீக்கதிரில் பதிவு செய்வதில் கொஞ்சம் அவருக்கு ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது. ஆனால் “பழைய சோற்றுக்கு ருசிகொடுக்கும் பச்சை மிளகாயாக நான் இருப்பேன்” என்ற துணிவோடு எழுத்துக் களத்தில் அவர் இறங்கினார். “கவிதையின் மூலக் கூறுகள்” தொடங்கி “நுட்பமான வார்த்தைகளில் இறங்கிய வெப்பம்” வரை 15 கட்டுரைகளில் அவரின் கவிதைப் பார்வை விரிந்தது. காலந்தோறும் கவிதைகள் மாறிவந்த விதம்; கவிதைகளுக்கென்றே தோன்றிய இலக்கிய இயக்கம்; கவிதைகளின் அரசியல், இளம் கவிஞர்களின் படைவரிசை, மூத்த கவிஞர்களின் வழிகாட்டல் ஆகியவற்றை இன்னும் விரிவாக எழுத ஜீவி கடன்பட்டிருக்கிறார். அதனை எதிர்காலத்தில் வசூலிப்போம். இருப்பினும் எடுத்துக்கொண்ட பணியில் – நேரப் போதாமைக்கிடையிலேயும் “மடுத்த வாயெல்லாம் பகடு போல்” முயற்சி செய்து கடமை முடித்தவர் என்பது மகிழ்ச்சிக்குரியது. கட்டுரைகளிலும் தனது கவித்துவத்தை ஒவ்வொரு வாரமும் பரிணமிக்கச் செய்தவர் அவர். அகவல், கலி, வஞ்சி, வெண்பா என்று தொடங்கி விருத்தப் பாக்களில் விரிந்து புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ என இன்று கிளைத்துக் கொண்டேயிருக்கின்றன கவிதைகள். இவ்வளவையும் உள்வாங்கி உருவம் கொடுக்கிறது தமிழ். இப்படியான கவிதைப் பூக்களின் எழிற்கோலத்தை எழுதிக்காட்டுகிறார் அவர். “கோலம்போடும் வாசல் பழசுதான் என்றாலும் புள்ளிக்கோலம், மடக்குக்கோலம், படிக்கோலம் என விதவிதமாய் வரைந்து காண்பவர் கண்களை, அடகுபிடித்துக் கொள்ளும் அம்மா” இங்கே கவிஞர்களோடு உவமிக்கப்படுகிறாள். அம்மாவையும் அம்மாவின் கோலத்தையும் அதிகம் ரசிக்கின்றவர்போலும் கவிஞர் ஜீவி! அதனால் தான் இன்னொரு கட்டுரையிலும் அந்தக் கோலத்தை நினைவுபடுத்துகிறார். “ஆரம்ப காலக் கவிதைகளோடு நின்று போனவர்கள், வெள்ளிக்கிழமை மட்டும் படிக்கோலம் போடும் அம்மாபோல அவ்வப்போது எழுதி சகதோழர்களோடு சேர்ந்து தொகுப்புத் தந்தவர்கள், நீரோடிய ஆறுபோல ஒரு தொகுப்போடு வறண்டு போனவர்கள், கொஞ்சினாலும் குட்டு வைத்தாலும் அம்மா மடியிலேயே தவழும் குழந்தைபோல கவிதைகளின் பின்னாலேயே திரண்டு வந்தவர்கள்” எனக் கவிஞர்களை வகைப்படுத்திப் பார்க்கிறார். இது கவிஞர்களிடம் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துவதற்காக அல்ல. “மனைவியின் மோதிரத்தை (இது இடக்கரடக்கலாக சொல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது) அடகு வைத்து வாங்கிய தாளில் தங்கள் கவிதைகளை அச்சடித்துத் தமிழ் கூறு நல்லுலகின் முன் நீட்டும் இளைய கவிகளின்” நிலைமையையும் எண்ணிப் பார்க்கும் அக்கறை இதில் இழையோடுகிறது. ஆரம்பகாலக் கவிஞர்களையும் சில அசகாய விமர்சகர்கள் மட்டைரெண்டாகக் கிழித்து படைப்பு மனங்களைக் காயப்படுத்துவார்கள். இது வேண்டாம் என்கிறது ஜீவியின் படைப்பு மனம். “கிணற்றை ஆழப்படுத்துகிறேன் பேர்வழி என்று ஊற்றுக்கண்களை அடைத்து விடக்கூடாது” என்று கோருகிறது. இளம் கவிஞர்கள் தொடங்கி மூத்த கவிஞர்கள் வரை மீண்டும் ஒருமுறை நினைவுக் களஞ்சியத்திலிருந்து ஏராளமாகக் கொடுத் திருக்கிறார். மயிலை பாலு

Leave a Reply

You must be logged in to post a comment.