லக்னோ, பிப். 18- 32 சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்கள் மற்றும் 12 முன்னாள் அமைச்சர்களின் தலைவிதியை நிர்ணயிக்கக்கூடிய நான்காவது கட்டத் தேர்தலுக்கு உத்தரப்பிரதேசம் தயாராகி வருகிறது. 11 மாவட்டங்களில் நடைபெறவுள்ள நான்காவது கட்டத் தேர்தலில் 56 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. 1.74 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஹர்தோய், உன்னாவோ, லக்னோ, ரேபரேலி, பரூக்காபாத், சிஎஸ்எம் நகர், கன்னோஜ், பாண்டா, சித்ரகூட், பதேபூர் மற்றும் பிரதாப்கார் தொகுதிகளில் 967 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ், சமாஜ்வாதிக்கட்சி மற்றும் பாஜக போன்ற கட்சிகள் போட்டியிடுகின்றன. இத்தேர்தலில் போட்டியிடும் 103 வேட்பாளர்கள் மீது பல குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் 139 கோடீஸ்வரர்கள் போட்டியிடுகின்றனர். உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் ரீட்டா பகுகுணா ஜோஷி, பாஜக தேசிய துணைத்தலைவர் கல்ராஜ் மிஸ்ரா, 12 முன்னாள் அமைச்சர்கள், 32 சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்கள், 3 அமைச்சர்கள் உள்பட பல பெருந்தலைகள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.