இந்தியாவின் ஆறாவது ஒலிம்பிக் தங்கப்பதக்கம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்த ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளில் கிடைத்தது. இந்தியாவின் ஹாக்கி ஆதிக்கமும் ஒலிம்பிக் ஹாக்கி தங்கப்பதக்கத்தின் மீதான தொடர் ஆளுமையும் இத்துடன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. மெல்போர்னில் மொத்தம் 12 அணிகள் போட்டியிட்டன. இவை மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சுழல் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தியாவின் குழுவில் ஆடிய ஆப்கானிஸ்தானை 14-0 என்றும் யு.எஸ்.அணியை 16-0 என்றும் சிங்கப்பூர் அணியை 6-0 என்றும் இந்தியா தோற்கடித்தது. இந்தியா ஒரு கோல் கூட வாங்கவில்லை. அரை இறுதியில் ஜெர்மனியை வெல்ல இந்தியா மிகவும் சிரமப்பட்டு 1-0 என வென்றது. இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதி ஆட்டத்தில் மோதின. பிரிவினைக்குப்பின் இந்தியாவும் பாகிஸ்தானும் சர்வதேச ஹாக்கி போட்டிகளில் முதல் முறையாக மோதிக்கொண்டன. இறுதி ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் நடுப்பகுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு பெனால்டிகார்னர் கிடைத்தது. பந்தை உத்தம்சிங் கோல் கோட்டிலிருந்து தள்ளிவிட்டார். தற்காப்பாளர் ரகுபீர்சிங் போலா பந்தை நிறுத்தினார். ரண்தீர் ஜென்டில் பந்தை அடித்தார். பாகிஸ்தான் வீரர் பந்தை சரியாகத் தடுக்கவில்லை. பந்து உருண்டு கோலுக்குள் நுழைந்தது. இந்தியாவின் ஆறாவது தங்கம் நாட்டுக்கு வந்தது. எந்தவொரு நாடும் இன்றுவரை இப்படியொரு சாதனையைப் படைக்கவில்லை. இந்திய வீரர் உத்தம்சிங் மெல்போர்ன் ஒலிம்பிக்கில் 15 கோல்கள் அடித்தார். ஒலிம்பிக் போட்டிகளில் அதிக கோல்களை அடித்த தனியொரு இந்தியர் என்ற அவருடைய சாதனை இன்றுவரை தொடர்கிறது. பல்பீர் சிங் (சீனியர்) இந்திய அணிக்கு தலைமையேற்ற முதல் சீக்கியர் என்ற பெருமையைப் பெற்றார். இவர் தொடர்ந்து மூன்று தங்கப்பதக்கங்களை வென்று கோல்டன் ஹேட்டிரிக் சாதனை படைத்தார். மூன்று ஒலிம்பிக் தங்கங்களை தொடர்ந்து வென்று சாதனை படைத்த ஐவரில் பல்பீர் சிங் (சீனியர்)கும் ஒருவர். இவருக்கு பின்பு ஹாக்கி நிபுணர் தயான் சந்த், கோல்கீப்பர் ரிச்சர்ட் ஜேம்ஸ் ஆலன் ஆகிய இருவரும் 1928, 1932, 1936 ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து தங்கம் வென்றவர்களாவர். 1948, 52, 26ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பல்பீர் சிங் (சீனியர்), ரண்தீர் சிங் ஜென்டில், ரங்கநாதன் பிரான்சிஸ் ஆகிய மூவரும் தொடர்ந்து தங்கம் வென்றுள்ளனர். பல்பீர்சிங் (சீனியர்) கோல்டன் ஹேட்ரிக் என்ற பெயரில் தன் சுயசரிதையை எழுதியுள்ளார். ஓய்வுபெற்ற பின்னரும் இந்திய ஹாக்கியுடன் தனது இணைப்பைத் தக்க வைத்துக்கொண்டவர். 1975ல் உலகக்கோப்பையை வென்று இந்திய அணிக்கு இவர் பயிற்சியாளராக இருந்தார். 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் முதன்முதலாக அரங்கேறின. 1938ம் ஆண்டில் சர்வதேச ஹாக்கி அமைப்புடன் ஆஸ்திரேலியா ஹாக்கி அமைப்பு இணைந்தது. ஆனால் 1956ல்தான் அது ஒலிம்பிக் போட்டிகளில் களம் இறங்கியது. இந்தியா விடுதலை பெற்றபின், நாடு பிளவுற்றபின் ஏராளமான ஆங்கிலோ இந்தியர்கள் இந்தியாவையும் பாகிஸ்தானையும் விட்டு வெளியேறி ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தனர். பியர்ஸ் சகோதரர்களான எரிக், ஜூலியன், மெல், கார்டன் ஆகிய நான்குபேரும் இந்தியாவிட்டு வெளியேறி, ஆஸ்திரேலியாவில் குடியேறினர். லக்னோவில் இருந்து பெர்த் சென்ற இவர்கள் நால்வரும் ஆஸ்திரேலிய அணியில் ஒலிம்பிக் போட்டிகளில் ஆடினர். எரிக் பியர்ஸ் 1956, 60, 64 ஒலிம்பிக்கிலும் கார்டன் 1956, 60 ஒலிம்பிக்கிலும், மெல் 1956 ஒலிம்பிக்கிலும் ஜூலியன் 1960, 64 ஒலிம்பிக்கிலும் ஆடினர். எரிக் பியர்ஸின் மகள் கோல்லீன் 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் மகளிர் போட்டிகளில் ஆடினார். 1956ல் நியூசிலாந்தும் ஒலிம்பிக்கில் முதன் முதலாகக் களம் இறங்கியது. 1956க்கு முன் ஆஸ்திரேலியாவைத் தவிர்த்து நியூசிலாந்துடன் ஆடிய அணி இந்தியா மட்டுமே. 1956க்கு முன் இந்திய அணி நான்கு முறை நியூசிலாந்து சென்றுள்ளது. நாயக அணி பல்பீர் சிங் (சீனியர்), சங்கர் லட்சுமண் (கோல்கீப்பர்), ரங்கநாதன் பிரான்சிஸ், பக்ஷீஸ் சிங், ரண்தீர் சிங் ஜென்டில், லெஸ்லி கிளாடியஸ், அமீர் குமார், கோவிந்த் பெருமாள், சார்லஸ் ஸ்டீபன், குர்தேவ் சிங், உத்தம்சிங், ரக்பீர்சிங் போலா, பாலகிருஷ்ணசிங், ஹரிபால் கௌசிக், ரக்பீர்லால், ஒ.பி.மல்ஹோத்ரா, ஹர்தயாள் சிங், அமித் எஸ்.பக்ஷி. தொகுப்பு : தாஸ்

Leave A Reply

%d bloggers like this: