வாகை சூட நாகை புறப்படுவோம்! கத்தும் கடல் முத்தம் இடும் நாகை அழைக்கிறது! வர்க்கச்சமர் யுத்தப்படைதனை நாளை அழைக்கிறது! எட்டுத்திசை எட்டப்பறை கொட்டிப் புறப்படுவோம்! பூமிபொதுவென பொழுதுபுலர்ந்திட வெற்றி முளைத்திடும்! கடல் தரித்தபுயல் கரைதனை தொடுகிற பட்டினம் அதுவல்லவா? கால்வலித்த காவிரி மகள் அவள் குந்தும் கடைமடை அதுவல்லவா? வெண்மணிக் கங்குகள் வெப்பம் குறையாத வீரப்பரப்பல்லவா? பஞ்சைப் பராரிகள் நெஞ்சு நிமிர்ந்திட்ட சரித்திரம் நமதல்லவா? வயல்புகுந்த புயலென பி.எஸ்.ஆர். நடந்த தடம் இருக்கிறது- அவர் பாதம் பதித்த பாதையில் தானே இன்றும் நம் படை நடக்கிறது! நஞ்சை மனிதர்கள் விடுதலைக்காக குப்பு நஞ்சைக் குடித்த நிலமல்லவா? நெஞ்சை நிமிர்த்தி அடிமைகள் ஆன கதை சொல்லவா? கக்கத்தில் இடுக்கிய துண்டை தோளுக்கு மாற்றிய செங்கொடி புதல்வர்கள் நாமல்லவா! பெண்கள் முழங்காலுக்கு கீழே சேலையை இறக்கிய பெருமையும் நமக்கல்லவா! சாணிப்பால் குடித்த தொண்டைக்குழிகளில் அக்கினி வார்த்தைகள் வெடிக்க வைத்தோம்! சாட்டையடி தந்த கொடிய கைகளை நாம் தானே அன்று முறித்து வைத்தோம்! உதிர நிறக்கொடி கைகளில் சுடர்விட உரிமைக்குரல்களால் திசைகள் அதிர்ந்திட புறப்படு தோழனே நாகைக்கு முன்னுரை எழுதுவோம் வாகைக்கு!

Leave a Reply

You must be logged in to post a comment.