கோவை,பிப். . 17- பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள மேலாண்மை கல்வி நிறுவனங்களின் அமைப்பான ‘பிரிக்ஸ்’ அமைப்பின் சார்பில் ஆண்டு தோறும் நடைபெறும் பிஸினஸ் கல்வி பயிலும் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி கோவை பி.எஸ்.ஜி கல்வி நிறுவனத்தில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து பி.எஸ்.ஜி மேலாண்மை கல்வி நிறுவனத்தின் இயக்குநர் ஆர்.நந்தகோபால் தெரிவிக்கையில், மேற்கண்ட ஐந்து நாடுகளில் செயல்படும் பிஸினஸ் கல்வி நிறுவனங்கள் இணைந்து பிரிக்ஸ் என்ற அமைப்பை உருவாக்கி கடந்த ஐந்து வருடங்களாக இயங்கி வருகிறோம். உலக பொருளாதார வளர்ச்சியில் எதிர்காலத்தில் இந்த ஐந்து நாடுகள் தான் முக்கிய இடம் பிடிக்கும் என்பதால் இப்படி ஒரு அமைப்பை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆண்டுதோறும் இக்கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்களில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து வருகிறோம். இந்த ஆண்டு 17,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இச்சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். மேற்கண்ட நாடுகளைச் சேர்ந்த 65 மாணவர்கள் இதில் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சியில் பொருளாதாரம், வணிகம், தொழில் மற்றும் கலாச்சாரம் குறித்த விளையாட்டுப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இதன் ஒரு பகுதியாக நிகழ்ச்சியில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கோவையிலுள்ள தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிடவுள்ளனர். பி.எஸ்.ஜி தொழிலாளர் தினம் மேலும் வருகிற 20ம் தேதி பி.எஸ்.ஜி கல்வி நிறுவன நிறுவனர் ஜி.ஆர்.தாமோதரன் பிறந்த நாள் என்பதால் அந்நாளை ஆண்டுதோறும் பி.எஸ்.ஜி தொழிலாளர் தினமாக கொண்டாடி வருகிறோம். இந்தாண்டு, இந்நிறுவனத்தில் பணியாற்றி வரும் நான்காயிரம் தொழிலாளர்கள், ஊழியர்களுக்கும் மற்றும் அவர்களது குழந்தைகளுக்குமான பல்வேறு விதமான போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் இவ்விழாவில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார். எஸ்.வி.சேகர் நடத்தும் நாடகமும் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.