கோவை, பிப். 17- கோவை ராமகிருஷ்ணாமிஷன் வித்யாலயாவிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பேராசிரியருக்கு, மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் எதிரில் அரசு உதவி பெறு ம் தனியார் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர்கள் (ஆக்டா) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலத் தலைவர் முனைவர் ஆ. இராஜா தலைமையில் போராசிரியர்கள் வெள்ளியன்று உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், 2004 ஜனவரி 1ந்தேதிக்குப்பின் பணி நியமனம் பெற்ற அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஓய்வூதிய பலன்களை வழங்கிடவேண்டும். பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய ஊதிய உயர்வு முரண்பாடுகள் மற்றும் தீர்வுகள் தொடர்பான அறிக்கையினை உடனே வெளியிட வேண்டும். அரசு உதவி பெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும். மேலும். சென்னை உயர்நீதி மன்ற அறிவுரையினை முற்றிலும் பொருட்படுத்தாமல், கோவை ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயா பேராசிரியர் எஸ். சுதர்சனுக்கு, கல்லூரி கல்வி இயக்குனரால் பாரபட்சமாக வழங்கப்பட்ட பணி நீக்க ஆணையினை ரத்து செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. இப்போராட்டத்திற்கு ஈரோடு மண்டலத் தலைவர் என். கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் எஸ்.சந்திரன் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி வைத்து வாழ்த்திப் பேசினார். ஆக்டோ சங்கத்தின் பொதுச் செயலாளர் முனைவர் எஸ். சோமசுந்தரம், முன்னாள் தலைவர் சேவியர் பிச்சையா, பொருளாளர் காளீஸ்வரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 15 பெண் பேராசிரியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: