நீடிக்கும் மின்வெட்டால் விவசாயிகள் தவிப்பு கோடை விவசாயம் நாசமாகும் அபாயம் சென்னை, பிப். 15 – தமிழகத்தில் நீடித்துவரும் கடும் மின்வெட்டு காரணமாக கோடை விவசாயம் நாசமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எச்சரித்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பிப்ரவரி 13 அன்று திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் கே.முகமது அலி தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், மாநிலப் பொரு ளாளர் அ.நாகப்பன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டச் செயலாளர் சி.மாசிலாமணி வரவேற்றார். மாவட்டத் தலைவர் நடராஜன் நன்றி கூறினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: வரலாறு காணாத மின்வெட்டால் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதனால் அனைத்துப் பிரிவினரும் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். மின்விநியோகத்தில் எந்தவிதமான ஒழுங்குமில்லாமல், அதிகாரிகள் விருப்பத் திற்கேற்ப விநியோகிக்கும் போக்கு உள்ளது. விவசாயத் திற்கு ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் மட்டுமே மும் முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் பயிர்கள் கருகி விவசாயிகள் பெரும் இழப்பை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. கோடைகாலப் பயிர்கள் முற்றிலும் இல்லா மல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மத்திய மின்தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு 2800 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும். ஆனால், தற்போது 1000 மெகாவாட் மட்டுமே மத்திய மின்தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது. மீதியுள்ள 1800 மெகாவாட் மின்சாரத்தை மத்திய அரசிடமிருந்து தமிழக அரசு வற்புறுத்தி பெற வேண்டுமென கோருகிறோம். தமிழக அரசு, விவசாயத்திற்கு ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 10 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிக்காத வகையில் மின்விநியோகத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். மத்திய மின்தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய மின்சாரத்தை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மார்ச்2ந் தேதி மின்வாரிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. மின்தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கி பிப்ரவரி 29, மார்ச் 1 ஆகிய இரண்டு நாட்கள் மாநிலம் முழுவதும் விரிவான பிரச்சாரத்தை மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டது. மேலும், தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதுடன், விவசாயப் பணிகளை துவக்க புதிதாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் பிப்ரவரி-28ல் நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க தேவையான நடவடிக்கையில் ஈடுபடுவதென கூட்டம் தீர்மானித்தது.

Leave A Reply

%d bloggers like this: