மின் வெட்டைக் கண்டித்து விசைத்தறியாளர்கள் உண்ணாவிரதம் – முற்றுகை ப.பாளையம், பிப் 14- தொடர் மின்வெட்டைக் கண்டித்து பள்ளிபாளையத்தில் விசைத்தறியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிபாளையத்தில் சுமார் 15 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். தற்போது. அமல்படுத்தப்பட்டு வரும் வரலாறு காணாத கடும் மின் வெட்டால் விசைத்தறி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்களும் வேறு வேலையைத் தேட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் விசைத்தறி உரிமையாளர்கள் மின் வெட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு அடப்பு தறி உரிமையாளர் சங்க தலைவர் வேலு (எ) செங்குட்டுவன் தலைமை வகித்தார். ஜவுளி வியாபாரிகள் நலசங்க தலைவர் மகேஷ் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி வைத்தார். முன்னாள் நகர மன்ற தலைவர் குமார், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.அசோகன், சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.மோகன், பொதுத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எ.காசிவி°வநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் பாப்புலர் முருகேசன் மாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை பழரசம் கொடுத்து முடித்து வைத்தார். சேலம் சேலம் அம்மாபேட்டை பகுதி காமராஜர் காலனி, வஉசி. நகர், பெரியார் நகர், பகுதிகளில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் உடையாப்பட்டியில் உள்ள மின்சார மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இப்பகுதிகளில் அறிவிக்கப்படாத 10 மணிநேர தொடர் மின்வெட்டின் காரணமாக விசைத்தறிகள் அடிக்கடி பழுதாகின்றன. இதனால் விசைத்தறி உரிமையாளர்களுக்கு தறி ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, சீரான மின்சாரம் வழங்க வேண்டும். மின் கட்டணம் உயர்த்துவதை அரசு கைவிடவேண்டும் என முழக்கமிட்டனர். மேலும். இதனை அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால் கலெக்டர் அலுவலகம் முன்பு கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம் நடத்துவோம் என விசைத்தறி துணி உற்பத்தியாளர் சங்க மாவட்டச் செயலாளர் அழகிரிநாதன் போராட்டத்தின் போது தெரிவித்தார். இம்மின்வாரிய அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் முற்றுகைப் போராட்டம் காரணமாக மாநகர உதவி கமிஷனர் தங்கராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: