பிப்.28 வேலை நிறுத்தம்: திருப்பூரில் ஏற்பாடுகள் தீவிரம் திருப்பூர், பிப். 14- பிப்ரவரி 28ம் தேதி அகில இந்தியப் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை திருப்பூரில் வெற்றி பெறச் செய்ய அனைத்துத் தொழிற்சங்கங்கள் உறுதியேற்றுள்ளன. திருப்பூர் ஏஐடியுசி அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் பிஎம்எ° மாவட்டச் செயலாளர் சந்தானம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிஐடியு சார்பில்கே.உண்ணிகிருஷ்ணன்,எம்.சந்திரன், சி.மூர்த்தி, டி.குமார், பி.முருகேசன், ஜி.சம்பத், கோபாலகிருஷ்ணன், நாகராஜ், கணேசன், அன்பு, ஏஐடியுசி சார்பில் நடராஜன், சேகர், ஜெகநாதன், ஐஎன்டியுசி சார்பில் ராஜேந்திரன், செந்தில், அரசு ஊழியர் சங்கம் சார்பில் ராஜகோபால், எல்பிஎப் சார்பில் பூபதி, எச்எம்எ° சார்பில் காளியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 28ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை திருப்பூரில் வெற்றிகரமாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அனைத்துப் பிரிவுத் தொழிலாளர்களையும் இதில் முழுமையாகப் பங்கேற்கச் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது. கட்டுமான சங்கம் முடிவு திருப்பூர் மாவட்ட கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் விரிவுபட்ட மாவட்டக் குழுக் கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன், சங்க மாவட்டச் செயலாளர் டி.குமார் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்டம் முழுவதும் பிப்ரவரி 28ம் தேதி அனைத்து கட்டுமானத் தொழிலாளர்களும் வேலையை நிறுத்தி அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தை மகத்தான வெற்றி பெறச் செய்வதென்று இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கைத்தறி நெசவாளர்கள் முடிவு அதேபோல் சிஐடியு திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்கத்தின் மாவட்டக் குழுக் கூட்டம் திங்களன்று மாவட்டத் தலைவர் உத்தமன் தலைமையில் நடைபெற்றது. பொறுப்புச் செயலாளர் சண்முகம், பொருளாளர் பாண்டுரங்கன் உள்பட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் அனைத்து கைத்தறி நெசவாளர்களையும் பங்கேற்க வைத்து பிப்ரவரி 28ம் தேதி அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வதென்றும் முடிவு செய்யப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.