மத்திய மண்டலம் சுருண்டது துலீப் கோப்பையை வெல்லும் வாய்ப்பு கிழக்கு மண்டல அணிக்கு இம்முறை கிடைத்துள்ளது. அதை அந்த அணி முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்தூரில் மண்டல சாம்பியன் பட்டத்துக்கான கிரிக்கெட் இறுதி ஆட்டம் நடைபெற்று வருகிறது. ஞாயிறன்று முதல்நாள் ஆட்டம் நடந்தது. நாணயச் சுண்டலில் வென்ற கிழக்கு மண்டலம், மத்திய மண்டலத்தை ஆட அழைத்தது. மத்திய மண்டலம் 133 ஓட்டங்களில் சுருண்டது. கிழக்கு மண்டலம் மூன்று விக்கெட் இழப்புக்கு 88 ஓட்டங்கள் எடுத்துள்ளது. கிழக்கு மண்டல வேகப்பந்தாளர்கள் ஷாமி அகமது, அசோக் திண்டா, பசந்த் மொகந்தி ஆகிய மூவரும் மத்திய மண்டல வீரர்களைத் திணறடித்தனர். ஷாமியின் வேகம், திண்டாவின் துடிப்பு, மொகந்தியின் கூர்மை அவர்களை மிரட்டியது. ஒரு கட்டத்தில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 67 ஓட்டங்களுடன் வசதியாக ஆடிய மத்திய மண்டலத்தை இம்மூவரும் 133 ஓட்டங்களில் சுருட்டினர். திண்டாவும் ஷாமியும் தலா நான்கு பேரையும், பசந்த் இருவரையும் வெளியேற்றினர். அரை இறுதியில் சிறப்பாக ஆடிய வினீத் சக்சேனாவும் ரோஹிட் பிஸ்ட்டும் இப்போது ஏமாற்றிவிட்டனர். பிஸ்ட் பரிதாபமாக ஆட்டம் இழந்தார். அவர் ஒரு பந்தை கால் திசையில் திருப்பிவிட்டார். பந்து மட்டையில் பட்டவுடன் மட்டை உடைந்துவிட்டது. இதனால் பந்து திசைமாறி திண்டாவின் கைகளில் உட்கார்ந்தது. கிழக்கு மண்டல அணி 3 விக்கெட்டுகளை இழந்து 88 ஓட்டங்கள் எடுத்துள்ளது. அனுஸ்டுப் மஜும்தார் 46 ஓட்டங்களுடனும் விருத்தமான் சஹா 14 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

Leave A Reply