india

img

நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடா?

புதுதில்லி:
மத்திய அரசு, தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுதும் விரிவுபடுத்த இருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் எதிர்ப்பினை மீண்டும் பதிவு செய்துள்ளது.இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:மத்திய அரசு, தேசியக் குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுதும் விரிவுபடுத்திட இருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் தன் எதிர்ப்பினை தெரிவித்துக் கொள்கிறது. உள்துறைஅமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றத்தில் நாடு முழுவதற்கும் தேசியக் குடிமக்கள் பதிவேடு உரு வாக்கப்படும் என்றும் இத்துடன் அஸ்ஸாமுக்கான தேசியக் குடிமக்கள் பதிவேடு மீண்டும் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.

இதனை எப்போது துவங்கப் போகிறோம் என்று தேதி குறிப்பிட்டு அவர் எதுவும் சொல்லவில்லை என்ற போதிலும், தேசியக் குடிமக்கள் பதிவேட்டுக்கான நடைமுறை, 2020 ஏப்ரல் 1 முதல் தேசியமக்கள் தொகை பதிவேட்டுக்கான கணக்கெடுப்பு துவங்கும் சமயத்தில் சேர்த்தே மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் அடிப்படையில், தேசியக் குடிமக்கள் பதிவேடு இறுதிப்படுத்தப்பட இருக்கிறது.ஏற்கனவே ‘ஆதார்’ மற்றும் தேர்தல் ஆணையத்தின் அடையாள அட்டை அமலில் இருந்துவரும்போது, இது ஒரு தேவையற்ற மற்றும் வீணான நடைமுறையாகும். ஆளும் கட்சியினரின் நிகழ்ச்சிநிரலின்படி, நாட்டில் உள்ள சில பிரிவினரை “அந்நியர்கள்” என்று முத்திரை குத்துவதற்காகவே இது மேற்கொள்ளப்படுகிறது.அஸ்ஸாமில் மீண்டும் தேசியக்குடிமக்கள் பதிவேட்டை மேற்கொள்ளவிருக்கும் அரசின் நடவடிக்கையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. தேசியக்  குடிமக்கள் பதிவேட்டு நடைமுறை உச்சநீதி மன்றத்தின் மேற்பார்வையின்கீழ் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதற்கான ஒட்டுமொத்த நடைமுறைச் செலவினங்களும் 1600கோடி ரூபாயாகும். இந்தியப் பிரஜைகளை பட்டியலிலிருந்து விலக்குவதை உத்தரவாதப்படுத்து வதற்கான இந்த நடைமுறையை மீண்டும் அங்கே துவங்குவதற்கான அவசியம் என்ன? மற்றுமொரு தேசியக் குடிமக்கள் பதிவேடு மேற்கொள்வதற்கான நடைமுறை, பல்வேறு பிரிவு மக்கள் மத்தியில் புதிய சுமைகளையும், பாதுகாப்பற்ற உணர்வுகளையும் உருவாக்கிடும். இது, மக்களை மதரீதியாகப் பிரித்திட வேண்டும் என்கிற பாஜக-வின் நிகழ்ச்சிநிரலுக்கே சேவகம் செய்யும். இவ்வாறு அரசியல் தலைமைக் குழு அறிக்கையில் கூறியுள்ளது.(ந.நி.)

;