headlines

img

தாமதம்தான், எனினும் வரவேற்கத்தக்கது

(குரோனாவைரஸ் தொற்று நெருக்கடியைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, உச்சநீதிமன்றம் இப்போது சமூகத்தில் வடுப்படத்தக்கநிலையில் உள்ளவர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட முன்வர வேண்டும்.)

 ஊரடங்கு உத்தரவால் வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கித்தவித்த கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களின் அவலநிலையினைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, கடைசியில் உச்சநீதிமன்றம், தங்கள் வீடுகளுக்குச் செல்வதற்குப் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும், நிவாரணம் அளிப்பதற்கும் நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஊடகங்களில் வந்துள்ள செய்திகள் மற்றும் மூத்த வழக்குரைஞர்களின் பிரதிநிதித்துவம் ஆகியவற்றின் அடிப்படையில்  உச்சநீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய அமர்வாயம் தாமாகவே (suo motu) இந்நடவடிக்கையை எடுத்திருக்கிறது. இவர்கள், தொழிலாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிற நெருக்கடியைக் கையாள்வதில் மத்திய மாநில அரசுகள் மத்தியில் போதாமை மற்றும் குறைபாடுகள் இருந்திருக்கின்றன என்று கூறியிருக்கிறார்கள்.

மத்திய அரசு வெறுமனே நான்கு மணி நேர அறிவிப்பில் ஊரடங்கைப் பிறப்பித்தபின் இந்தியா முழுவதும் கோடானுகோடி பேர் நிர்க்கதியாய் நிறுத்தப்பட்டநேரத்தில் அவர்களுக்காக மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோதே, அதாவது ஏழெட்டு வாரங்களுக்கு முன்பாகவே, உச்சநீதிமன்றம் இதனைச் செய்திருக்க முடியும். உச்சநீதிமன்றத்தின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதநிலையில், நாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது குறித்து எவ்விதமான தன்முனைப்புமின்றி, சாலைகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் எவரும் இல்லை என்று அரசாங்கம் கூறியதை நீதிமன்றம் அப்போது அப்படியே ஏற்றுக்கொண்டிருந்தது. மேலும் நீதிமன்றம் சாலைகளில் உள்ள தொழிலாளர்களுடன் கனிவுடன் நடந்துகொள்ளுமாறு காவல்துறைக்கு அறிவுரை வழங்கியதுடன், மத்திய அரசின் கூற்றுக்களை ஊடகங்கள் உயர்த்திப்பிடித்திட வேண்டும் என்றும் துரதிர்ஷ்டவசமானமுறையில் அறிவுறுத்தியது.  முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உலக நெருக்கடியை மத்திய அரசு சமாளித்திடும் என்ற நம்பிக்கையிலிருந்தே நீதிமன்றம் இவ்வாறு தலையிடுவதற்குத் தயங்கி இருக்கலாம். ஆனால், நடைமுறையில், அடிப்படை உரிமைகளை, அதிலும் குறிப்பாக மிகவும் வடுப்படத்தக்கநிலையில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களைப் பாதுகாத்திடும் அடிப்படைப் பொறுப்பினை அது கைவிட்டுவிட்டது.  இவற்றின் விளைவாகத்தான் ஓய்வுபெற்ற நீதிபதிகள் மத்தியில் திகைப்பு ஏற்பட்டு, அவர்கள் உச்சநீதிமன்றம் வெளிப்படையாக தன் கடமையைக் கைவிட்டுவிட்டதாகக் கூறியிருந்தனர்.

இப்பிரச்சனையை எடுத்துக்கொள்வதற்கு வெட்கப்பட்டதா அல்லது இப்போது தலையிடுவதற்கான நேரம் கனிந்து வந்திருப்பதாக அது கருதியதா, எப்படியிருந்தபோதிலும் நீதிமன்றம் இப்போதாவது அரசாங்கத்தின் தோல்விகளை விமர்சன ரீதியாக பார்த்திட முன்வரவேண்டும். நிர்வாகம் பதில்சொல்லியாகவேண்டும் என்று பல உயர்நீதிமன்றங்கள் சிறப்பான முறையில் உத்தரவுகள் பிறப்பித்ததைப்போன்று, உச்சநீதிமன்றமும் நடந்துகொள்ள வேண்டும்.

மத்திய அரசாங்கம், சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளைத் தயார்படுத்துவதற்கான காலத்தை வாங்குவதற்காகத்தான், கடும் ஊரடங்கைப் பிறப்பித்து, அது தன்னுடைய பொறுப்புகளை நிறைவேற்றியதாக உச்சநீதிமன்றம் இப்போது காண வேண்டும்.  அரசாங்கம் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பொருளாதார மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்குத் திட்டமில்  மற்றும் ஒருங்கிணைப்பு முதலானவற்றிற்கான வழிகாட்டுதல்களையும் வரையறுத்திடலாம். அரசாங்கமும் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி எச்சரிக்கை செய்யும் விதத்தில் சட்ட அதிகாரிகளைக் கேட்டுக்கொள்வதற்குப் பதிலாக, ஊடகங்களைக் கண்டிப்பதற்குப் பதிலாக, அரசாங்கத்தின் செயல்களை விமர்சிப்பவர்களின் நாட்டுப்பற்று குறித்து கேள்வி கேட்பதற்குப் பதிலாக, நிறையவே செய்திட வேண்டும். இப்போதைய நாட்டிலுள்ள துயாரார்ந்த நிலைக்கு அரசியல் நிபுணத்துவத்துடன் கூடிய செயல்பாடுகள் தேவைப்படுகின்றன.

(நன்றி: தி இந்து தலையங்கம், 30.05.20)

தமிழில்: ச. வீரமணி

;