tamilnadu

img

குரூப் - 4 தேர்வு முறைகேடு : சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி.... புதிய மனு தாக்கல் செய்ய அனுமதி

மதுரை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி- 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி புதனன்று தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வியாழனன்று தள்ளுபடி செய்தது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய தொகுதி- 4 தேர்வில் முறைகேடு நடைபெற்ற தாக எழுந்த புகாரின் அடிப்படையில் இரு வாரங்களுக்கு முன்பு சிபிசிஐடி  காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, 19 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி- 2 ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறை தனியாக ஒரு வழக்கைப் பதிவுசெய்து, 14 பேரை கைது செய்தது. 
இந்த வழக்குகளில் இரு தேர்வாணைய ஊழியர்கள், மூன்று காவலர்கள் மற்றும் தேர்வர்கள் கைது செய்யப்பட்டனர். இரு வழக்குகள் குறித்தும் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டது. இந்தத் தேர்வில் லஞ்சம் கொடுத்து தேர்ச்சி பெற்ற விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வடமருதூர் மேட்டுக்காலனி கிராமத்தைச் சேர்ந்த மு.நாராயணன் என்ற சக்தி என்பவரை  சிபிசிஐடி காவல்துறையினர் கடந்த 7-ஆம் தேதி கைது செய்தனர். 

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முறைகேடு தொடர்பாக இது வரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே தொகுதி- 4 தேர்வு முறைகேடு வழக்கில் ஓம்காந்தனின் கூட்டாளிகளாக செயல்பட்ட எண்ணூர் அன்னை சிவகாமிநகரைச் சேர்ந்த க.கார்த்திக் (39), த.செந்தில்குமார் (36), பெரம்பூர் ஜி.கே.எம். காலனியைச் சேர்ந்த ச.சர்புதீன் (42) ஆகியமூன்று பேரை சிபிசிஐடியினர் திங்கள்கிழமை கைது செய்தனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக கைது நடவடிக்கை தொடர்கிறது.இந்நிலையில் தொகுதி- 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும்  இந்த விசாரணையை உயர் நீதிமன்றம் நேரடியாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ்  சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் புதனன்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, டி.ரவீந்திரன் அமர்வில் வியாழனன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது மத்திய உள்துறை செயலரை எதிர்மனுதாரராக சேர்த்ததை நீக்க வேண்டும். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வுக்காக மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நீக்க வேண்டும் எனவும்  நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் புதிதாக மனு தாக்கல் செய்ய உரிமை வழங்கி, முந்தைய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

;