tamilnadu

டாக்டர் க.செல்வராஜ் காலமானார்...

நீண்டநெடிய - உயிர்ப்புமிக்க நாடக இயக்கத்தை மதுரையில் வளர்த்தவர். உடல்நலம் குன்றியிருந்த நிலையிலும், மதுரை கூடல் அரங்கு சார்பில் கடந்த நவம்பர் 3 அன்று தான் “மந்தையன் நேற்று செத்துப்போனான்” எனும் சிறந்ததொரு நாடகத்தை அரங்கேற்றியிருந்தார்.சமீபகாலமாக உடல்நலம் குன்றியிருந்த டாக்டர் க.செல்வராஜ் புதனன்று மதியம் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மனைவிபேராசிரியர் சாந்தி, மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவராவார். அவருக்கு இசையமுது என்ற மகள் இருக்கிறார்.திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் கிராமத்தில் கருப்பையா - எஸ்தர் தம்பதியரின் மகனாகப் பிறந்து, பட்டிவீரன்பட்டி கிராமத்தில் பள்ளிப்படிப்பு பயின்று, முதல் தலைமுறை மாணவராக மருத்துவக் கல்லூரியில் அடியெடுத்து வைத்து, மருத்துவ மாணவர்களின் கல்விக்கனவு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஏழை, எளிய உழைப்பாளி குடும்பத்து குழந்தைகளின் கல்விக்கனவை பாதுகாப்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் டாக்டர் க.செல்வராஜ்.

தலைவர்கள் இரங்கல்
அவரது மறைவுச் செய்தி அறிந்து கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், மதுக்கூர் இராமலிங்கம், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மூத்த தலைவர் எஸ்.ஏ.பெருமாள், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் உள்ளிட்ட தலைவர்கள் அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளனர்.

;