tamilnadu

img

ஒரு விளம்பரம் - ஒரு விளக்கம்

தீக்கதிர் மதுரை பதிப்பு 24.12.2019 தேதியிட்ட இதழில் மத்திய அரசு விளம்பரம் ஒன்று வெளியாகியுள்ளது. விளம்பரத்தின் முகப்பிலேயே இந்திய அரசின் சின்னம் இடம் பெற்றுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை நியாயப்படுத்தி மத்திய அரசு அளித்துள்ள விளம்பரம் அது. தினமணி மதுரை பதிப்பிலும் இந்த விளம்பரம் வந்துள்ளது.

அந்த விளம்பரத்தில் இடம் பெற்றுள்ள ஒரு வரி கூட தீக்கதிர் பத்திரிகைக்கு உடன்பாடானது அல்ல. குடியுரிமைச் சட்ட திருத்தத்தை எதிர்த்து ஒவ்வொரு நாளும் சண்டமாருதம் செய்து வருகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அந்த கட்சியின் ஏடான தீக்கதிர் தினந்தோறும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த ஆபத்துக்களையும், மக்களை மதரீதியாக பிளவுபடுத்த மேற்கொள்ளப்படும் சதியையும் உண்மையின் பக்கம் நின்று விரிவாக விளக்கி எழுதி வருகிறது. தமிழில் வெளியாகும் நாளேடுகளில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து அதிக அளவில் கட்டுரைகளையும், தலையங்கங்களையும், செய்திகளையும் வெளியிடும் ஏடு தீக்கதிரே ஆகும் என்று பெருமிதத்துடன் சொல்ல முடியும். இந்த விளம்பரம் வெளியாகியுள்ள அதே நாளில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கெதிரான சென்னை பேரணி குறித்த செய்திகள், கட்சியின் அறிக்கை, பிரகாஷ் காரத் கட்டுரை வெளியாகியுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு பின்னால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது என்று பிரதமர் மோடி ஆத்திரத்தோடு சொன்ன போது, கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, நாங்கள் இந்தப் போராட்டத்தில் நாங்கள் பின்னால் நிற்கவில்லை. போராட்டக் களத்தில் முன்வரிசையில் நிற்கிறோம் என்று பதிலடி கொடுத்தது அனைவரும் அறிந்ததே.ஆனால் சில விஷமிகள் இது தீக்கதிரின் கருத்து என்பது போல அவதூறு பரப்பி வருகின்றனர். விளம்பரத்தில் வெளியாகும் வாசகங்களுக்கு சம்பந்தப்பட்ட ஊடகம் பொறுப்பல்ல என்பது ஊடகத் துறையின் அடிப்படை விதியாகும். இதுகுறித்து கவலையோடு கேட்பவர்களுக்கு உரிய முறையில் விளக்கம் அளிப்பது எங்களது கடமை. 
ஆனால் அதே நேரத்தில் தீக்கதிர் மீதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதும் அழுக்கை அள்ளிப் பூச வேண்டும் என்ற நோக்கத்துடன் பொய்யுரைப்போர் நோக்கம் நிறைவேறாது. இத்தகைய அழுக்குகளால் தீக்கதிரை இழிவுபடுத்திவிட முடியாது. ஏனெனில் இது எப்போதும் உழைக்கும் மக்களின் பக்கமும், உண்மையின் பக்கமும் மட்டுமே நிற்கும் நெருப்பு.

===ஆசிரியர்===

;