tamilnadu

img

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களின் வயது கிமு905 கிமு 791 உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

மதுரை,ஏப்.4- ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழாய்வுப் பொருட்கள் 3000 ஆண்டுகள் பழமையானவை என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரண்டு பொருட்களும் கிறிஸ்து பிறப்புக்கு முந்தைய கி.மு 905 மற்றும் கி.மு. 791காலக்கட்டத்தை சேர்ந்தது என்று தொல்லியல் துறை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.தூத்துக்குடியைச் சேர்ந்த எழுத்தாளர் காமராஜ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில்,ஆதிச்சநல்லூரை தொடர்ந்து ஆய்வுகளை போல பரம்பு உள்ளிட்ட சில பகுதிகளில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என கோரியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆதிச்சநல்லூரில் ஆய்வு நடத்தி 16 ஆண்டுகள் நிறைவடைந்தபிறகும், ஆய்வு குறித்து அறிக்கை சமர்ப்பிக்காதது ஏன்? என்று தொல்லியல் துறைக்கு கேள்வி எழுப்பினர்.இந்த வழக்கில் விளக்கம் அளித்த தொல்லியல் துறை, ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வு மாதிரி பொருட்கள்கார்பன் சோதனைக்காக அமெரிக்கா புளோரிடா மாகாணத்திற்கு அனுப்பப்பட்டது. அதன்மூலம் ஒரு பொருளின் காலகட்டம் கி.மு. 905 என்றும், மற்றொரு பொருளின் வயது கி.மு. 791 என்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறியது.மேலும், இந்த வழக்கில் விளக்கம் அளிக்ககூடுதல் கால அவகாசம் வேண்டும் என தொல்லியல் துறை நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், இந்தியாவின் பழமையான மொழி தமிழ் தான் என்று தெரிய வந்த பின்னும், கார்பன் சோதனை முடிவுகளை வைத்து ஆதிச்சநல்லூரில் அடுத்தக்கட்ட அகழ்வாய்வு பணிகளை தொடரப்போவது மத்திய அரசா? அல்லது மாநில அரசா? என்று கேள்வி எழுப்பினர்.இதுதொடர்பாக தொல்லியல் துறை விரைவில் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். வழக்கினை ஏப்ரல் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

;