tamilnadu

img

100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளப் பாக்கி ரூ.1000 கோடியை வழங்குக! சு.வெங்கடேசன் எம்.பி., கடிதம்

மதுரை, ஏப்.1- மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய கூலி பாக்கியை உடனடி யாக வழங்க வேண்டுமென மத்திய கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியிருப்ப தாவது:- கோவிட்-19, இந்தியா முழுமையும் கிராமப்புற உழைப்பாளி மக்களின் வாழ்க்கையைத் தலைகுப்புறப் புரட்டிப்போட்டிருக்கிற வேளை இது. கடும் நெருக்கடி  மூழ்கடிக்கிற நிலையிலும் கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் குரூரமான வஞ்சனைக்கு உள்ளாக்கப்படுவதை அதிர்ச்சியோடும் அக்கறையோடும் உங்களின் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.  கிராமப்புற மக்களின்  வாழ்வாதாரத்திற்கான எல்லா வழிகளும் அடைபட்டுள்ள சூழலில் மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டத்தின் கூலி இரண்டரை மாதங்களாக வழங்கப்படவில்லை என்பது அநீதி அல்லவா? தமிழகத்தில் ஜனவரி 13-ஆம் தேதியிலிருந்து அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கூலி பாக்கி ரூ 671 கோடி. பொருளாகத் தரவேண்டிய பாக்கி ரூ 300 கோடி.

மொத்தம் ரூபாய் 1000 கோடியைத் தொடுகிறது. இது நாள் வரை மத்திய அரசிடமிருந்து இதற்கான நிதி வந்து சேரவில்லை.  ஒரு புறம் நாள்கூலி ரூ.20 உயரும் என்ற அறிவிப்பு. மறுபக்கம் செய்த வேலைக்கு கூலி இரண்டரை மாத பாக்கி என்பது வேதனையான முரண் அல்லவா? வேலை அட்டை வைத்திருப்பவர்களில் ஏழு சதவீதம் பேருக்கே 100 நாட்களும் வேலை கிடைக்கிறது என்ற வழக்கமாக உள்ள வஞ்சனை. தற்போது இவ்வளவு நெருக்கடி மிக்க காலத்திலும் கூலிபாக்கிக்கு அவர்களை அல்லாடவிடுவது மிகக்கொடூரம் அல்லவா? இதற்காக ஓர் மன்னிப்பை இந்திய பிரதமர் கேட்கிற நிலைமை வரக்கூடாது எனக் கருதுகிறேன். வெறும் வார்த்தைகள் போதாது. அவற்றால் பசித்த வயிறு நிரப்பாது.  உங்களின் உடனடிக் கவனம் தேவைப்படுகிற பிரச்சனை இது. ஏழை, எளிய மக்களின் உயிர்வாழ்கிற உரிமை குறித்த ஒன்று.  தமிழகக் கிராம உழைப்பாளி மக்களுக்கு  நிலுவையாக உள்ள ரூ.1000 கோடியை  காலவிரயம் இன்றி உடனே அனுப்பிவைத்து கிராமப்புற உழைப்பாளி மக்களுக்கு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

;