tamilnadu

img

தூத்துக்குடியில் இருந்து கப்பலில் வெளிநாடுகளுக்கு செல்லும் திருப்பூர் பின்னலாடைகள்

தூத்துக்குடி, மார்ச் 5 தூத்துக்குடியில் இருந்து கப்பலில் திருப்பூர் பின்னலாடைகள் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. கொரோனா தொற்று காரனமாக நாட்டில் வருகிற 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கன்டெய்னர்களில் பின்னலாடைகளை தூத்துக்குடி மற்றும் சென்னை துறைமுகங்களுக்கு அனுப்பி வைக்க முடியாத நிலை இருந்து வருகிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தயாரித்த ஆடைகள் பல நிறுவனங்களில் அப்படியே தேக்கமடைந்து உள்ளது. கரோனா பாதிப்பு இல்லாத நாடுகள் மற்றும் அந்த பாதிப்பில் இருந்து மீண்ட நாடுகளில் உள்ள வர்த்தகர்களுக்கு ஆடைகள் அனுப்ப முடியாத நிலை நீடித்து வந்தது. போலீஸ் கெடுபிடிகள் அதிகமாக இருப்பதால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக அகில இந்திய தலைவர் சக்திவேலு வலியுறுத்தி வந்தார் . அதன்படி அவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் மற்றும் தூத்துக்குடி , திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள், போலீசார் உள்ளிட்டவர்களிடம் பேசி பின்னலாடைகளை கொண்டு செல்ல பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். அவரது கோரிக்கைக்கு அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர். அதன்படி திருப்பூரில் இருந்து 10 கன்டெய்னர் லாரிகளில் ஏற்றப்பட்ட பின்னலாடைகள் தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது தடை உத்தரவு உள்ள நிலையில் திருப்பூரில் இருந்து பல நாட்களுக்கு பிறகு சரக்குகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மீண்டும் வர்த்தகம் தொடங்கியுள்ளதால் தொழில்துறையினர் உற்சாகமடைந்துள்ளனர்.

;